சந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்! – AanthaiReporter.Com

சந்திராயன் 2: ஆராய்ச்சி செய்ய போகும் நிலவின் முதல் போட்டோ இதுதான்!

கடந்த சில நாட்களாக நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2 தான் ஆராய்ச்சி செய்ய இருக்கும்நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படத்தை இஸ்ரோ நேற்று இரவு வெளியிட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 2,650 கிமீ உயரத்திலிருந்து கடந்த 21ஆம் தேதி இந்தப் படத்தை சந்திரயான் 2 எடுத்து  அனுப்பி உள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரி கோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திரயான் 2 முதன்முதலாகப் படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியிட்டது. அதன்பின், ஆகஸ்ட் 6ஆம் தேதி, 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண் கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர். ஆகஸ்ட் 20ஆம் தேதி திட்டமிட்டபடி நிலவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான் 2 நுழைந்ததாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் அறிவித்தார்.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருந்து நிலவைக் கண்காணித்து வரும். செப்டம்பர் 2ஆம் தேதி சந்திரயான் 2இல் இருந்து பிரிந்து வெளியேறும் லேண்டர் விக்ரமும், ரோவர் பிரக்யானும் நிலவின் மேற்பரப்பில் செப்டம்பர் 7ம் தேதி தரையிறங்கும்.

இந்நிலையில்தான், ந்திரயான் 2 நேற்று நிலவின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. சுமார் 2650 கிமீ. உயரத்தில் இருந்து சந்திரயான் 2 நிலவை புகைப்படம் எடுத்து தம் ஹெட் குவார்ட்டஸூக்கு அனுப்பி இருக்கிறது

வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணி அளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. சந்திரயான் தரையிரங்கும் போது அதை நேரடியாக இஸ்ரோ கட்டுப்பட்டு அறையிலிருந்து பார்வையிட பிரதமர் மோடிக்கு இஸ்ரோ சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.