சாம்பியன் -விமர்சனம்!

சாம்பியன் -விமர்சனம்!

பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை காதல் படங்கள், அம்மா செண்டிமெண்ட் படங்கள், காமெடி படங்கள், பேய் படங்கள், ரவுடி போலீஸ் படங்கள்,  ஹீரோயிச படங்கள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலக்  குறிப்பிட்ட வகையான படங்களே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து இருக்கும். இதெல்லாம் ஏதோ காரணத்தால் டல்லடிக்கும் போது அவ்வப்போது கடவுள் படம், சில்ரன்ஸ் படம் &  ஸ்போர்ட்ஸ் வகையறா படங்கள் அணி வகுக்கும். அந்த வகையில் விஜய் நடிப்பில் வந்த பிகில், கதிர் நடிப்பில் ஜடா-வை தொடர்ந்து கபடி மற்றும் கிரிக் கெட்டை மையப்படுத்தி படம் எடுத்த சுசீந்திரன் முதல் முறையாக கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘சாம்பியன்’ இன்று ரிலீஸாகி இருக்கிறது.. ஆனால் இந்த படம் நிஜமாகவே ஒரு ஸ்போர்ட்ஸ் பாயைக் கொண்டு மெய்யாலுமே புட் பாலில்  ட்ரெயினிங் – அதுவும் ஒரு வருடம் கொடுத்து உருவாக்கிய படம் என்பதால் கவனத்தை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே ஈர்க்கிறது.

மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த மனோஜ்பாரதிராஜா, தனது ஒரே மகனை இண்டியன் டீமில் ஆடும் ஃபுட்பால் பிளேயராக்க வேண்டும் என்று ஆசை. அதை புரிந்து புது நாயகன் விஷ்வாவும் பொடி வயதிலேயே கால்பந்தாட்டத்தில் அதீத ஆர்வம் காட்டி ஆடி வளர்ந்து வரும் சூழலில், மனோஜ் பாரதி கால்பந்தாட்ட மைதானத்தில் திடீரென இறந்து விடுகிறார். இதனால் தன் கணவரின் மரணத்திற்கு இந்த கால்பந்தாட்டம்தான் காரணம் என்று நினைக்கும் மனோஜின் மனைவி, தன் மகன் விஷ்வா கால்பந்தாட்டம் விளையாட தடை செய்து விடுகிறார். ஆனாலும் அம்மாவுக்கு தெரியாமல் தொடர்ந்து கால்பந்தாட்டம் விளையாடுகிறார் விஷ்வா. அப்போது விஷ்வானின் ஆட்ட திறமையைப் பார்த்து, கால்பந்து பயிற்சி அகாடமி ஒன்றில் கோச்சாக இருக்கும் நரேனிடம் அனுப்பி வைக்கிறார் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர். அங்கு தன் நெருங்கிய நண்பன் மனோஜின் மகன்தான் இந்த விஷ்வா எனத் தெரிந்து கொள்ளும் நரேன், அவனிடம் சிறப்புக் கவனம் எடுத்து ஸ்பெஷலாக பயிற்சி அளித்து, அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்ல நினைக்கும் போது, தனது அப்பா மரணம் அடையவில்லை- கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை விஷ்வாவுக்கு தெரிய வர, அந்த மரணத்திற்கு பழி வாங்க துடிக்கும் விஷ்வாவின் வாழ்க்கையே பந்தாடப்படுவதுதான் கதை..

ஜோன்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் ஹீரோ விஷ்வா-வுக்கு இதுதான் முதல் படமாம். டீன் ஏஜ் மாணவனின் நடை, பாவனையுடன் தேவையான அளவு கோபம் கூடவே கால் பந்தாட் டத்தின் மீதான ஆர்வம் மட்டுமின்ரி பருவத்துக்கு உரிய காதல் என சகல உணர்வுகளையும் இயல்பாக கேஷூவலாக வெளிப்படுத்தியுள்ளார். நிஜமான கால்பந்துக்கான பயிற்சியை ஒரு வருடம் எடுத்ததால் கால்பந்து விளையாட்டின் அத்தனை ஸ்ட்ரோக்-கையும் இலாவகமாக கையாண்டு தனி மதிப்பெண்கள் பெறுகிறார்.

ஃபுட்பால் கோச்- சாக வரும் நரேன் தன் பாத்திரமறிந்து தன் திறமையை முழுமையாக வழங்கி சபாஷ் சொல்ல வைக்கிறார். மிருணாளினி, செளமியா என்று பள்ளி & கல்லூரி கால -காதல் ஹீரோயின்களாம். ஸ்போர்ட்ஸ் படமென்பதாலோ என்னவோ இந்த விடலைக் காதல் காட்சிகள் ஒட்டவே இல்லை. ஹீரோவின் அப்பாவாக மனோஜ் பாரதிராஜா தன் அப்பாவிடம் இருந்து இன்னும் எதையும் கற்று கொள்ளாதவர் என்பதை இந்த படத்திலும் நிரூபித்து இருக்கிறார்.. வில்லன் ஸ்டண்ட் சிவா, பிச்சைக்காரன் வினோத் ரோல் ஜஸ்ட் பாஸ். நாயகனின் அம்மா -வாக வரும் ஜெயலட்சுமி தன் மகன் மீது காட்டும் பாசத்தை ஒவ்வொரு ஆடியன்ஸும் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு பிரமாதமாக ஆக்ட் செய்திருக்கிறார்.

சுஜித் -தின் கேமராவில் வடசென்னையும், கால் பந்தும் புதுசாக தெரிகிறது . அரோல் கரோலின் இசை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். வசனங்கள் வெங்கட்ராஜ் என்பவராம். கோலிவுட் இவரை இன்னும் அதிகமாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இந்த சாம்பியன் படத்தின் மூலம் புதுமுக நாயகன் விஷ்வா கோல் போட்டு விட்டார்.

மார்க் 3.5 / 5

error: Content is protected !!