காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் ஆயிடுச்சு: ஆனா …!? – AanthaiReporter.Com

காவிரி வரைவுத்திட்டம் தாக்கல் ஆயிடுச்சு: ஆனா …!?

இதோ.. அதோ என்று இழுத்து கொண்டு போகும் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி. காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம், புதுசசேரி, கேரளா, கர்நாடக மாநில அரசுகள், வரைவு திட்டம் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் வரைவு செயல்திட்டம் (‘ஸ்கீம்’) ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மார்ச் 29-ந் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் தாக்கல் செய்யவில்லை. ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. இதேபோல், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு கோர்ட் அவ மதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் மே 3-ந் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்வதை மத்திய அரசு தாமதப்படுத்தி வந்தது. அதிலும் கர்நாடக சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, மத்திய அரசு மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டது. அப்போது மத்திய அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய நீர்வளத்துறை செயலாளர் கோர்ட்டில் ஆஜராகி, வரைவு செயல் திட்டத்தை 14-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணை தொடங்கியது. அப்போது வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அப்போது இந்த வரைவு செயல் திட்டம் குறித்து தங்கள் தரப்பு வாதத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அதே சமயம் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா? அல்லது முகமையா? என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது. இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை குறித்து விசாரித்த போது, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் பாணியில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரியத்தில் ஒரு தலைவர், ஒன்பது உறுப்பினர்கள் என மொத்தம் 10 பேர் இடம்பெறுவர். அதில், மத்திய நீர்வளத்துறை செயலரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?

* நீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு பதிவு செய்ய வேண்டும்

* நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட நீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட வேண்டும்

* உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம் குழுவுக்கு அளிக்கப்படும். நீர் திறப்பு காலங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும்

* தேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை குழுக்களை அமைத்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது

1966-ம் ஆண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே பக்ரா, பியாஸ் அணைகளை இயக்கும் அதிகாரமும், ஏழு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்தின் கையில் வந்தது. பக்ரா அணை ஹிமாச்சல் மாநிலத்திலும், பியாஸ் அணை பஞ்சாப் மாநிலத்திலும் இருந்தாலும், அணையின் நிர்வாகம், ஆபரேஷன் மற்றும் திட்ட பராமரிப்பு ஆகியவற்றை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்துகிறது.

எனவே இதேபோன்றதொரு வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி நீரை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காவிரி வாரியத்திடம் சென்றுவிடும். எனவே பக்ரா பியாஸ் பாணியில் அமைக்கப்பட்டால் அது தமிழகம் எதிர்பார்த்த ஒரு அமைப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.