தேசிய அளவில் 1.2 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்து விட்டார்கள்! – AanthaiReporter.Com

தேசிய அளவில் 1.2 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்து விட்டார்கள்!

நாட்டில் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக் குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து  பிரதமர் மோடி தொடர் ஆலோசனை நடத்தி வரும் சூழலில் நடப்பு நிதியாண்டில் முதல் மூன்று மாதங்களுக்கு பின் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் வளர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றனவாம். இது மகிழ்ச்சியை தந்த போதிலும் தேசிய அளவில் 1.2 சதவீதம் பேர் வேலைவாய்ப்பை இழந்து விட்ட தாக இந்திய பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் (சிஎம்ஐஇ) அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியின் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் ஒன்றுக் கொன்று முரணான வகையில் இயங்கி வருகின்றன. 2018-19 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் மூன்று மாதங்களில் இந்தியாவின் தேசிய உற்பத்தி 8.2 சதவீதம் வளர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த 3 மாதங்களில் வேலைவாய்ப்பு 1 சதவீதம் குறைந்துள்ளது.

ஜூன் மாதத்திற்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் வரையில் 2-வது காலாண்டு ஆகும். இந்த கால பகுதி யில் இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து வளர்ந்து வந்த போதிலும் இந்த காலத்தில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது. ஜூலை மாதம் 1.4 சதவீதமும் ஆகஸ்ட் மாதம் 1.2 சதவீதமும் குறைந்து இருக்கிறது.

2017-18 ஆம் ஆண்டின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுடன் ஒப்பிட்டு வேலைவாய்ப்பு குறைந்திருப்பதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இருந்து வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதில் புதுமையான செய்தி என்னவென்றால், 2018-19 முதல் காலாண்டிலும் 2-வது காலாண்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016ம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து வேலை தேடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது.

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதாவது ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்துக்கு முந்தைய மாதம் 2016 அக்டோபரில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 44.4 கோடி. அடுத்த மாதங்களில் அது குறையத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 2.7 கோடி மட்டும் தான்.

ஏறக்குறைய ஓராண்டு காலத்தில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 44 கோடியில் இருந்து 2.7 கோடியாக குறைந்துள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது நமக்கு கிடைக்காது என்று நினைத்து வேலை தேடுவதை விட்டு விட்டார்கள். அதுதான் இந்த குறைவுக்கு காரணம்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சீராகியது. அதனாகல் மீண்டும் வேலை தேடுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்தது. 2018 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வேலை தேடுவோர் எண்ணிக்கை 42.8 கோடியாக உயர்ந்து விட்டது.

இவ்வாறு விரிவடைந்து கொண்டே போகும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரி வேலைவாய்ப்பு பெருகவில்லை. ஆனால் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் வேலையின்மை விகிதம் 2018 ஆகஸ்ட் மாதம் 6.4 சதவீதமாக உயர்ந்தது. 2017 ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 4.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வேலை தேடுவோர் எண்ணிக்கையும் வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கையும் சம விகிதத் தில் உயருவதற்கு வாய்ப்பு இல்லை. இதை சமீபத்தில் கேரளத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையோடு ஒப்பிடலாம்.

கேரளத்தில் மழை வெள்ளம் ஆகியவை காரணமாக அந்த மாநிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பிற மாநிலத்தவர் அனைவரும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு குறிப்பிட்ட ஒருவார கால இடைவெளியில் சென்று விட்டனர்.

வேலை தேடுவோர் எண்ணிக்கை திடீரென குறைந்து விட்டது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பும் வெள்ள காலத்தில் இல்லை எனலாம். ஆனால் இப்பொழுது எல்லோருக்கும் உடனடியாக வேலை கிடைக்கா விட்டாலும் வேலைவாய்ப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. வெளி மாநிலத்தவர் கேரளத்துக்கு திரும்ப இன்னும் தயக்கம் காட்டுகின்றனர் என்ற உண்மையும் குறிப்பிடத்தக்கது.