சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா! – AanthaiReporter.Com

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார்(பெண்) வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா!

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை, மூன்று மாத காலமாகியும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை; இந்திய வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதுவரையில் நடை பெறாத ஒன்று; மத்திய அரசின் இந்தச் செயலுக்கு சுப்ரீம் கோர்ட் சரியான எதிர்வினை ஆற்றாவிட்டால், காலம் ஒருபோதும் நம்மை மன்னிக்காது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலரே பகிங்கரமாகக் கடிதம் எழுதி கொதித்தெழுந்த நிலையில் பிரபல பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிப்பதற்கான கொலிஜி யத்தின் பரிந்துரைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்து மல்ஹோத்ரா இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ஆவார். கடந்த 35 வருடங்களாக இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் முக்கிய வழக்கறிஞர்கள் பலரிடம் இவர் ஜூனியராக இருந்துள்ளார். இதே போல் 4 ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டிருந்த 12 பேர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐகோர்ட்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான பரிந்துரைகள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் செல்லமேஸ்வரர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் அமைப்பிடம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை ஐகோர்ட் நீதித்துறை அதிகாரி சரோஜினி தேவி, வழக்கறிஞர் புகழேந்தி ஆகிய இருவரையும் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதை போல குஜராத் ஐகோர்ட்டுக்கு 5 நீதிபதிகளும், சட்டீஸ்கர் ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகளும், மும்பை ஐகோட்டுக்கு 1 நீதிபதியும் நியமனம் செய்யப்பட உள்ளன.

சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலை தொடர்ந்து வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா நாளை பதவியேற்பார் என்று எதிர்ப் பார்க்கப் படுகிறது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் தற்போது ஒரே பெண் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி இருந்து வருகிறார் என்பதுடன் தற்போது 25 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட், இவர்கள் இருவரையும் சேர்த்து 27ஆக உயர்ந்துள்ளதும் மொத்தம் 31 நீதிபதிகள் வரை சுப்ரீம் கோர்ட்டில் இயங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.