சசிகலாவின் பினாமி கம்பெனிகளுக்கு ஆப்பு ! மத்திய அரசு அதிரடி!

சசிகலாவின் பினாமி கம்பெனிகளுக்கு ஆப்பு ! மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 22 ஆயிரம் பேர் பலன் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷெல் கம்பெனிகள் ரூ.13 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கடந்த நவம்பர் 8-ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் 550 பேர் ரூ.3,900 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.இப்படி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிற ஷெல் கம்பெனிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு பிரதமர் அலுவலகம் அதிரடியாக உத்தரவிட்டது

இந்நிலையில் போலிநிறுவனங்களைத் தொடங்கி நிதி மோசடிகளில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் பட்டியலை மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள் மற்றும் வளைகுடா நாட்டு தொழிலதிபர் பெயர்களும் அடங்கியுள்ளது. குறிப்பாக் முன்னாள் கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, சிறையில் உள்ள சசிகலா, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, வளைகுடாவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.யூசுஃபலி உள்ளிட்டோர் அடங்குவர். மேலும் சசிகலாவுடன் தொடர்புடைய 4 போலி நிறுவனங்களை முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னரே குறிப்பிட்டது போல் ஷெல் நிறுவனங்கள் அல்லது போலி நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். இத்தகைய நிறுவனங்களின் வலைப்பின்னலை உடைத்து கறுப்புப் பணம்/ நிதி முறைகேடு, அன்னியச் செலாவணி மோசடி ஆகியவற்றைத் தடுப்பதுதான் நோக்கம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதில் கேரளாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னணி அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம், இங்கிருந்து 74,920 இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் 24,048, மும்பையில் 68,851, ஹைதராபாத்தில் 41,156, எர்ணாக்குளத்தில் 14,000, கட்டாக்கில் 13,383, அகமதாபாத்தில் 12,692 என்று தகுதி நீக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வளைகுடாவில் உள்ள ‘வெற்றிகரமான’ தொழிலதிபர் யூசுஃபலி நோக்ரா-ரூட்ஸ், என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு வெளிநாடு வாழ் கேரள மாநிலத்தவருக்கு உத்திகளையும், வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தவர். சசிகலாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்களான பேன்ஸி ஸ்டீல் பிரைவேட் லிமிடெட், ரைன்போ ஏர் பிரைவேட் லிட், சுக்ரா கிளப், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கலைக்கப்பட்டன.

புனேயில் 11,285 நிறுவனங்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 4,449 இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்த பெயர்களில் ஊழலுக்குப் பெயர் பெற்ற ஸ்மிருத்தா ஜீவன் ஃபுட்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் மோட்வர் உள்ளார். ஆடம்பர புனே ரியல் எஸ்டேட் அதிபர், ஆக்ஸ்பர்ட் ஸ்யூட்ஸ் தனியார் நிறுவனத்தின் அனிருத்தா சியோல்கர், அந்தல்கர் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஜோதி அந்தல்கர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த புள்ளிகளாவர். தற்போது பட்டியலில் உள்ள தகுதி நீக்க இயக்குநர்கள் அல்லது மூடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு நிதி அறிக்கைகளையோ, லாப நஷ்ட கணக்குகளையோ காட்டாதவர்கள்.

இந்த நடவடிக்கையில் இதுவரை பதிவு நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2.09 லட்சமாகும். இதில் நீக்கப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் சென்னை முதலிடம் வகிக்கிறது (24,048). இம்மாதிரி பதிவு நீக்கம் செய்யப்பட்ட, அல்லது தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் வங்கிக் கணக்குகளுக்கான அதிகாரபூர்வ கையெழுத்திட தகுதியற்றவர்கள் என்று மத்திய அரசு இந்த மாதத் தொடக்கத்தில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் வங்கிகளுக்கு இத்தகைய எச்சரிக்கை வருவதற்கு முன்பாக பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற இயக்குநர்கள் மீதும் நடவடிக்கை உறுதி என்று மத்திய அமைச்சகம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!