முதல் ரெண்டு வகுப்புக்கு நோ நோட்,,நோ புக்! – சி பி எஸ் இ . அறிவிப்பு – AanthaiReporter.Com

முதல் ரெண்டு வகுப்புக்கு நோ நோட்,,நோ புக்! – சி பி எஸ் இ . அறிவிப்பு

படிப்பது எல் கேஜியோ அல்லது பிளஸ் டூ-வோ கல்வியின் தரத்தை விட புத்தகப்பையின் கனம் ஏறிக்கொண்டேதான் போகிறது. அதனை சுமக்க முடியாமல் திணறுகிறார்கள் பிள்ளைகள். அந்தப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் முதுகே வளைந்து விடுகிறது. உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குக் கூட இத்தனை சுமையில்லை. அவ்வளவு சுமையானதா தொடக்கக்கல்வி?

edu sep 15

வெளிநாடுகளில் எல்லாம் பிள்ளைகள் சாப்பாட்டுப் பையை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்களின் கற்றலும் கற்பித்தலும் அவ்வளவு நவீனமாக இருக்கிறது. ஆனால் நம் மாணவர்கள் சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறார்கள். புத்தகப்பையின் சுமை அவர்களை களைப்படையச் செய்துவிடுகிறது. உடல்நலம், மனநலம் அனைத்தையும் பாதிக்கிறது. இத்தனைக்கும் நக விளிம்பில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஸ்டோர் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால் அது இன்னும் பள்ளியை எட்டவில்லை. டிஜிட்டல் மயம், நவீனமயம் என்றெல்லாம் வார்த்தைகளில் ஜாலம் காட்டுகிறார்கள்.

ஆனாலும் புத்தகங்கள், ஒவ்வொரு பாடப்புத்தகத்துக்கும் ஒரு கிளாஸ் நோட், ஹோம் வொர்க் நோட், ரஃப் நோட், டெஸ்ட் நோட் என பிள்ளைகளின் முதுகில் பொதி ஏற்றிக்கொண்டே இருக்கிறார்கள். மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காகவே முப்பருவக் கல்வி முறையும் சமச்சீர் கல்வி முறையும் கொண்டு வரப்பட்டது. மூன்று பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் புத்தகச் சுமை அப்படியொன்றும் குறையவில்லை.

இந்நிலையில் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், “சி.பி.எஸ்.இ. படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை அதிக சுமையாக உள்ளது. இதனால் முதுகு வலி, தசை வலி, தோள்பட்டை வலி ஆகியவை அந்த மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் விஷயத்தில் பள்ளிகள் முக்கிய பங்குவகிக்கின்றன.

மாணவர்கள் தினசரி வகுப்புக்கு தேவையான பாடப்புத்தகங்களை மட்டும் கொண்டுவருகிறார்களா? என்று ஆசிரியர்கள் திடீர் என்று மாணவர்களின் பைகளை சோதனை செய்யவேண்டும். தேவை இல்லாத வீட்டுப்பாட நோட்டுகள், தேவை இல்லாத பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை மாணவர்கள் கொண்டுவரலாம். அவ்வாறு மாணவர்களிடம் கொண்டுவரக்கூடாது என்று ஆசிரியர்கள் கூறவேண்டும்.

அதிக எடை இன்றி புத்தகப்பைகள் கொண்டு வருகிறார்களா? என்று தினமும் ஆசிரியர்கள் பரிசோதனை செய்யவேண்டும்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடை குறைவான புத்தகப்பைகளை வாங்கிக்கொடுக்கவேண்டும். பள்ளிக்கூட மாணவர்களின் புத்தகங்களின் எடையை குறைக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறு துணையாக இருக்கவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் தினமும் எந்த எந்த புத்தகங்கள், நோட்டுகள் கொண்டு வரவேண்டும் என்ற கால அட்டவணையை முன்கூட்டியே மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். மாணவர்களுக்கு பள்ளிக்கூட நேரங்களில் மட்டும் புராஜெக்ட் கொடுக்கவேண்டும். அதை குழுவாக மாணவர்கள் செய்யவேண்டும். அந்த புராஜெக்டை பள்ளிக்கூட நேரம் தவிர வீட்டுக்கு கொண்டுசெல்லக்கூடாது.

பெற்றோருக்கு வேண்டுகோள்

மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிப்பு தொடர்பாக கொண்டு வரும் எந்த ஒரு பொருளும் எடை குறைவாக இருக்கவேண்டும். தொடக்கப்பள்ளி வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோர், புத்தகப்பையை தினமும் கண்காணிக்கவேண்டும். தங்கள் குழந்தைகள் கால அட்டவணை படி கொண்டுசெல்கிறார்களா? என்பதை உறுதி செய்யவேண்டும்.

புத்தகப்பை, வீட்டுப்பாடம்

குறிப்பாக 1-வது மற்றும் 2-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயம் கொடுக்கக்கூடாது. அவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது. மாணவர்கள் அதிக எடையுடன் குடிநீர் பாட்டில் கொண்டுவருகிறார்கள். இதை தவிர்க்கவேண்டும். எனவே பள்ளிகள் குடிநீரை வைத்திருக்கவேண்டும். அந்த தண்ணீரை பள்ளிக்கூட முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குடிக்கவேண்டும். மாணவர்கள் கூடுதலாக விளையாட்டு காலணிகளை கொண்டு வரக்கூடாது.

இவ்வாறு சி.பி.எஸ்.இ. வாரியம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.