காவிரி சர்ச்சை: சுப்ரீம் கோர்ட் (வழக்கம்போல்) ஒத்திவைப்பு! – AanthaiReporter.Com

காவிரி சர்ச்சை: சுப்ரீம் கோர்ட் (வழக்கம்போல்) ஒத்திவைப்பு!

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது! மேலும் நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம் எனவும் குறிப்பிட்டு மே 3ம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டது..

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தினை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட விசாரணையினை வரும் மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது!

அப்போது நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை நீங்கள் நடைமுறைப் படுத்தவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான திட்டத்தை மார்ச் 29-ம் தேதிக்குள் ஏன் செயல்படுத்தவில்லை. நாங்கள் உத்தரவு பிறப்பித்தபின் அதனை நீங்கள் கட்டாயமாக செயல்படுத்துவதில் உங்களுக்கு பிரச்சினை ஒன்றும் இல்லையே. பிறகு எதனால் தாமதம் ஏற்படுகிறது.

நதிநீர் பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் தலையிட்டு நாங்கள் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது. அதனால் தான் இதற்கான செயல் திட்டத்தை நீங்கள் உருவாக்க வேண்டும் என நாங்கள் கூறினோம்.நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கினோம்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேலாண்மை திட்டத்தை தயாரித்து, வரைவு திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்த பின்பே இந்த விஷயத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியும். கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அமைதி நிலவுதை உறுதி செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்று நீதிபதிகள் கூறினர்.

இது குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நிதிபதி ஒருவர்,  “மே 3ந் தேதியன்று மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்தாலும் அதன் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை! ஜூலை மாதத்தில் தான் காவிரி குறித்து ஏதேனும் உத்தரவு வர வாய்ப்பு உள்ளது. அதுவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கருத முடியவில்லை” என்றார்