காவிரி நதி நீர் ஒதுக்கிட்டு பிரசனை! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரம்! – AanthaiReporter.Com

காவிரி நதி நீர் ஒதுக்கிட்டு பிரசனை! – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விபரம்!

கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி டிரிபுனல் வழங்கிய நீர் ஒதுக்கீட்டு தீர்ப்பை எதிர்த்து காவிரி பாசன மாநிலங்கள் எல்லாம் மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தன. அந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டைச் சேர்ந்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஒரே ஆணையில் தமிழகத்திற்கு டிரிபுனல் அறிவித்த நீர் அளவை 419 டிஎம்சியில் இருந்து 404.25 டிஎம்சி ஆக குறைத்துவிட்டது. (1 டிஎம்சி என்பது 100கோடி கன அடி ஆகும்). தற்போது சுப்ரீம் கோர்ட்டுன் தீர்ப்பை திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும், எல்லா விவசாயிகளின் சங்கங்களும் கடுமையாக குறை கூறியதுடன், தமிழக அரசையும் கடுமையாக சாடியுள்ளனர்.

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ் – மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் காவிரி பிரச்சினை தொடர்ந்ததால் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தியது. காவிரி வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 1991-ல் இடைக்கால தீர்ப்பு வழங்கிய நிலையில், 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழகம், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதே வேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ,” மாநிலங்களுக்கிடையே ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடக்கும் காவிரி வழக்கை, ஒரே மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

காவிரி வழக்கில் விசாரணை நிறைவடைந்து 150 நாட்கள் நெருங்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்  நேற்று, “காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று (வெள்ளி) காலை தீர்ப்பு வழங்கப்படும்” என அறிவித்தது. அதன் படி இன்று வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கான நீரில் அளவு 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டு 177.2 டிஎம்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. காவிரி நீர் வழங்கப்பட்டு வந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கர்நாடகத்துக்கான நீரின் பங்கு 284.75 டி.எம்.சி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்துக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் கிடைக்கப்போகிறது.
அதேவேளையில், கேரளாவுக்கு 30 டிஎம்சி புதுச்சேரிக்கு 7 டிஎம் சி என்ற நடுவர் மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் காவிரி வழக்கின் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த பிரச்னைகளைப் பரிசீலிக்கலாம் என கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், காவிரி பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கூடவே காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்டவற்றை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி தொடர்பான, அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. குறிப்பாக தனது தீர்ப்பில் மதராஸ்-மைசூர் இடையிலான 1892, 1924 ஒப்பந்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழக அனுமதியின்றி புதிதாக கர்நாடகாவை அணை கட்ட முடியாது எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.