திருமணச் செலவுக்கு பண எடுக்க என்ன வழி? – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு – AanthaiReporter.Com

திருமணச் செலவுக்கு பண எடுக்க என்ன வழி? – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

ரூ.500, ரூ,1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், கர்நாடகாவில் பல திருமணங்கள் தடைபட்டு வருகின்றன. ராம்நகர், பெலகாவி, ரெய்ச்சூர், மைசூர், விஜயபுரா, தார்வார், கார்வார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், ரூ.500, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்பதால் பெண் வீட்டார், பணத்தை மாற்ற முடியாமல் அவதிப்பட்டனர்.

money nov 21

இதனால், செலவுக்கு பணம் இல்லாததால் 10க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்துசெயயப்பட்டு மறு தேதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒத்திவைக்கப் பட்டுள்ள நிலையில் திருமண வீட்டார் தகுந்த ஆவணங்களை காட்டி ரூ.2.50 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று பொருளாதாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், இந்த திருமண வீட்டார் பணம் எடுப்பது எப்படி என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வருமாறு;-

பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண செலவுகளை செய்வதற்காக, வங்கி கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 8-ந்தேதி, வங்கி அலுவல் முடிந்த நேரத்தில், ஒருவர் தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருந்ததோ, அதிலிருந்து அதிகபட்சமாக ரூ.2½ லட்சம்வரை எடுத்துக்கொள்ளலாம். டிசம்பர் 30-ந்தேதிவரை இந்த அனுமதி செல்லும்.

‘கே.ஒய்.சி.’ (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) விதிமுறைகளை முற்றிலும் பூர்த்தி செய்த கணக்குகளில் இருந்து மட்டுமே பணம் பெற முடியும். டிசம்பர் 30-ந் தேதியோ அல்லது அதற்கு முன்போ நடத்தப்பட உள்ள திருமணத்துக்கு மட்டுமே இந்த அனுமதி செல்லும்.

திருமணம் செய்து கொள்ளும் நபரோ அல்லது அவருடைய தாய், தந்தையோ வங்கிக்கு சென்று பணத்தை எடுக்கலாம். ஆனால், யாரேனும் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

பணம் எடுப்பதற்கான விண்ணப்பத்துடன், திருமண அழைப்பிதழ் உள்ளிட்ட ஆதாரங்களையும், திருமண மண்டபம் மற்றும் சமையல்காரர்களுக்கு கொடுத்த முன்பணத்துக்கான ரசீது நகல்களையும் இணைக்க வேண்டும். மணமக்களின் பெயர்கள், அவர்களின் அடையாள ஆவணங்கள், முகவரி மற்றும் திருமண தேதியையும் குறிப்பிட வேண்டும்.

ரொக்கமாக செலவழிப்பதற்காகவே பணம் எடுக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யும்வகையில், யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட உள்ளதோ, அவர்களுக்கெல்லாம் வங்கி கணக்கு இருக்கக்கூடாது.

யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட உள்ளதோ, அவர்களின் பெயர் பட்டியல் தாக்கல் செய்யப்பட வேண்டும். அத்துடன், அவர்கள் தங்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்று அளித்த உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டும். என்னென்ன செலவுகளுக்காக பணம் கொடுக்கப்பட உள்ளது என்ற பட்டியலையும் அளிக்க வேண்டும்.

இந்த ஆதாரங்களை எல்லாம் வங்கிகள் சரிவர பராமரிக்க வேண்டும். தேவைப்படும்போது, ஆய்வுக்கு வரும் மேல் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

அதே சமயத்தில், ரொக்கம் இல்லாத பரிவர்த்தனைகளான காசோலை, வரைவோலை, கிரெடிட், டெபிட் கார்டுகள், பிரீ பெய்டு கார்டுகள், மொபைல் பரிவர்த்தனை, நெட்பேங்கிங் போன்ற வழிமுறைகளில் திருமண செலவுகளை செய்ய பொதுமக்களை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும்.

ஆகவே, எந்தெந்த செலவுக்கு ரொக்கமாக மட்டுமே கொடுக்க முடியுமோ, அதற்கு மட்டும் ரொக்கத்தை பயன்படுத்துமாறு பொதுமக்களை வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.

என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.