நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு! – AanthaiReporter.Com

நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

நடிகர் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சனையில் பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை தாக்கியதாக சந்தானம் மீது சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த 2015-ம் ஆண்டு வளசரவாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் பில்டிங் கான்ட்ராக்டருமான சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், உறுதி அளித்தபடி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட தொகையை சண்முக சுந்தரம் திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், மீதி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மீதம் உள்ள பணத்தை திரும்பக் கேட்டு நடிகர் சந்தானம் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் ரமேஷ் என்பவரும் சென்றுள்ளார்.

பணத்தை திரும்ப கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது கைகலப் பாக மாறி ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சண்முகசுந்தரத்துக்கு ஆதரவளித்த அவரது நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதற்கிடை யில் காயம் அடைந்த பிரேம் ஆனந்த் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். நடிகர் சந்தானமும் காயம் அடைந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவுப்படி தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் மேற்பார்வையில் விசாரணை நடந்து வந்ததும் அதன் ஒரு கட்டத்தில் மோதலில் ஈடுபட்ட சந்தானம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செந்து. போலீஸ் தேடுவதை அறிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய சந்தானம் தலைமறைவாகியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.