கார்டூனிஸ்ட் பாலா கைது!- நெல்லை கலெக்டர் புகார் எதிரொலி! – AanthaiReporter.Com

கார்டூனிஸ்ட் பாலா கைது!- நெல்லை கலெக்டர் புகார் எதிரொலி!

திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கலெக்டர், போலீஸ் அதிகாரி  மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி கலெக்டர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

பாலா, பிரபல வார இதழான குமுதம் நிறுவனத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கார்ட்டூனிஸ்டாக பணியாற்றி வந்தவர் அப்பணியில் தன்னை விடுவித்துக் கொண்டு லைன்ஸ் மீடியா என்னும் வெப்சைட் தொடங்கி தன் கேலிச் சித்திரத்தையும், பல்வேறு படைப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

அந்த  வகையில்  தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு  அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.

அந்தக் கட்டுரையில், ”கந்து வட்டி கும்பலைவிட புகார் மீது நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும், இரு குழந்தைகளின் தகப்பனாக வயிறு எரிந்து சொல்கிறேன். பற்றிய நெருப்பு உங்களை தலை முறையாக விடாது. மனசும் உடம்பும் எரியுது பாவிகளா,” என்றும் காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.

கண்டவுடன் பார்ப்போரிடம் நெருப்பு பற்றி  கொள்ளும் வகையில் இருந்த  அந்த கார்ட்டூன் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சாதாரண உடையில் சென்னை கோவூருக்கு இன்று வந்த காவல்துறையினர் நான்கு பேர், கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். அவரை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றனர். விசாரணைக்காக அவரை திருநெல்வேலிக்குக் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.