எங்களுக்கே குடிக்க தண்ணியில்லை; அதுனாலே தமிழ்நாட்டுக்கு தண்ணி லேது! – கர்நாடகா அறிவிப்பு – AanthaiReporter.Com

எங்களுக்கே குடிக்க தண்ணியில்லை; அதுனாலே தமிழ்நாட்டுக்கு தண்ணி லேது! – கர்நாடகா அறிவிப்பு

சொன்னா நம்புங்க.. எங்க கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை, சொல்லப் போனா எங்க ஸ்டேட் ஜனங்க குடி நீருக்கே பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் இருக்கிறோம் என சுப்ரீம் கோர்ட்டி கர்நாடகா பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பல ஆண்டுகளாக சர்ச்சையாகி வந்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதை 6 வாரங்களுக்குள் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசு 6 வது வார முடிவில் ‘ஸ்கீம’் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு இழுத்தடித்தது. அதே சமயம் தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. நீதிமன்ற உத்தர‌வை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. அப்போது இந்த வழக்கில் மத்திய அரசு முழுமையான வரைவுதிட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அதுபற்றி மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த வழக்கு மே 3-ம் தேதி விசாரணைக்கு வந்த போது சுப்ரீம் கோர்ட் அறிவித்தப்படி மேலாண்மை திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகிவிட்டது, ஆனால் கையெழுத்திட வேண்டிய மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவைக்கு அனுப்ப முடியவில்லை என மத்திய அரசு சார்பில் தெரிவிககப்பட்டது. இதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவில் தேர்தல் நடப்பது குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை, வரும் 8-ம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

ஏற்கெனவே அறிவித்தபடி உடனடியாக தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தது. வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில்தான் கர்நாடக அரசு சார்பில் காவிரி நீர் தொடர்பாக பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழகத்திற்கு எங்களால் காவிரி நீரை திறந்து விட முடியாது. எங்களது அணைகளில் போதிய அளவிற்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்கே தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு கூடுதலாகவே தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். போதிய தண்ணீர் இல்லாததால் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது குரிப்பிடத்தக்கது.