தவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடலாமோ?

தவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடலாமோ?

ஹெல்மெட் போடாமலும், காவலர்கள் நிறுத்தச் சொன்ன போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமலும் சென்ற நபரைத் துரத்திச் சென்ற போக்குவரத்துக் காவலர் ஒருவர் சிக்னல் அருகில் அந்த வாகனத்தை எட்டி உதைத்துள்ளார். நிலைதடுமாறிய வண்டியிலிருந்து 3 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கீழே விழ, பின் பக்கமாக வந்த வேன் ஒன்று அவர் மேல் ஏறி இறங்கி, அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலி.

திருச்சியில் நேற்று நடந்த சம்பவம். மனதுக்கு மிகுந்த வேதனையும், மன வருத்தத்தையும், சோகத்தையும் தருகிறது.

இதில் அந்த வாகனத்தை காவலர் எட்டி உதைத்தது மாபெரும் தவறு.

ஆனால்..

ஹெல்மெட் போடாமல் வந்தது யார் தப்பு?

காவலர்கள் நிறுத்தச் சொன்ன போது நான்கைந்து கிலோ மீட்டருக்கு நிறுத்தாமல் தப்பிச் சென்றது யார் தப்பு?

அந்த வண்டியை ஓட்டிச் சென்ற அந்த அயோக்கியக் கணவன்தான் அந்த பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணின் மரணத்திற்கு முழுக் காரணம். கர்ப்பிணியை பின்னால் உட்கார வைத்து வண்டி ஓட்டுகிறோம் என்ற பொறுப்புணர்ச்சி அந்தாளுக்கு வேண்டாமா? முதலில் கர்ப்பிணியை ஏன்யா இருசக்கர வாகனத்திலெல்லாம் அழைத்துச் செல்கிறீர்கள்? அதுவும் முன்புறம் டேபிள் கிரைண்டரை வேற வெச்சுக்கிட்டு போனாராம். ஹும்! (கிரைண்டர் வைத்திருந்த செய்தி : விகடன்.காம்)

உடனே போலீஸ்காரங்க லஞ்சம் வாங்குறதுக்காக வண்டிகளைப் பிடிக்கிறாங்க. எல்லா பேப்பர்ஸூம் சரியா இருந்தாலும் காசு கேட்கிறாங்க என்றெல்லாம் கதை விட வேண்டாம். எல்லாம் சரியாக இருந்தால்.. நாம் சரியாகச் சென்றால் அவர்கள் ஏன் காசு கேட்கப்போகிறார்கள்? வாகனங்கள் ஓட்டுகிறவர்கள் முதலில் சட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள். சாலையில் எங்கே எப்படி வாகனங்கள் ஓட்ட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவனவன் அப்பன் போட்ட ரோடு கணக்காக இஷ்டத்திற்கு நடுவில், வலது ஓரத்தில் எல்லாம் இரு சக்கர வாகனத்தில் செல்வதெல்லாம் தவறு. இரண்டு பேர் அமர்ந்து செல்லக் கூடிய இரு சக்கர வாகனத்தில் 3 பேர் போவது… செல்போனில் பேசியபடியே போவது.. ஹெல்மெட் இன்றி போவது.. சந்திலிருந்து சாலையில் திரும்பும் போது எதுவும் வாகனம் வருகிறதா என்றெல்லாம் பார்க்காமலேயே திரும்புவது.. இப்படியெல்லாம் ஓட்டுவதெல்லாம் சரியா?

தவறை நம் மீது வைத்துக் கொண்டு எல்லாவற்றிலும் காவல்துறை மீது மட்டும் பழி போடுவது அயோக்கியத்தனம்.

‘நாட்டில் இதை விடப் பெரிய குற்றங்கள் எல்லாம் நடக்கிறது. அதையெல்லாம் ஏன் பிடிக்கவில்லை?’ என்று சிலர் கேட்கிறார்கள். இதை விடப் பெரிய குற்றங்களாகட்டும்.. மிகச் சிரிய குற்றங்களாகட்டும்.. பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று சட்டையைப் பிடித்துக் கேள்வி கேளுங்கள். ஆனால் இதை ஏன் பிடித்தீர்கள் என்று கேட்காதீர்கள். இதுதான் போக்குவரத்துக் காவலர்களின் வேலை.

“சட்டப்படி நடக்க வேண்டிய காவலர் சட்டத்தை மீறி ஏன் உதைத்துத் தள்ளினார்?” என்று கேள்வி எழுகிறது. சரிதான். ஆனால் அதைச் செய்யத் தூண்டியது யார்? சட்டத்தை மீறிச் சென்றது முதலில் யார்? குறைந்தபட்சம் ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் அந்தப் பெண்மணி உயிர்பிழைத்திருக்கவாவது வாய்ப்பிருக்கிறதுதானே?

போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் தொந்தரவுகள் தருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன என்று விகடனில் எழுதுகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஹெல்மெட் போடாமல் வந்து, போலீஸார் நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் சென்று சாலையோரம் நடந்து வந்த பெண்ணின் மீது மோதி அந்தப் பெண் பலியானாராம். காவல்துறை அராஜகம் என்று விகடனில் எழுதுகிறார்கள்.

காவலர்கள் பரம யோக்கியர்கள் என்றெல்லாம் நான் கூறவரவில்லை. ஆனால் அவர்களை தவறிழைக்கச் செய்ய முதலில் தூண்டியது யார்? காவலர் மீது மட்டும்தான் தவறா என்பதே கேள்வி.

ஒரு பேச்சுக்கு.. தப்பிச் சென்ற நபர் பெரிய குற்றவாளியாக இருந்தால்? முதலில் ஏன் பயந்து ஓட வேண்டும்? அதில்தான் பிரச்னையே! தடுக்காமல் காவலர்கள் விட்டிருந்தால்.. எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் .. காவல்துறை லட்சணத்தைப் பாருங்கள் என்று இதே மக்கள்தானே கேட்பார்கள்?

என்ன அநியாயம் இது? முதலில் ஹெல்மெட் போடாமல் ஏண்டா வந்தீங்க என்று கேளுங்கள். காவலர்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்துங்கள். அதையெல்லாம் செய்யாமல் எல்லாவற்றுக்கும் அவர்கள் மட்டுமே காரணம் என்று கூறுவது சரியா? திருச்சியில் நேற்று பெண் இறந்ததற்கு துரத்திச் சென்று எட்டி உதைத்த காவலரும் காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் காரணமா?!

கிரைண்டரை வைத்துக் கொண்டு, கர்ப்பிணி மனைவியை பின்னே வைத்துக் கொண்டு ஹெல்மெட் போடாமல், காவலர் நிறுத்தியும் நிற்காமல் பல கிலோ மீட்டர் ஓட்டிச் சென்ற நபர் அப்பாவி இல்லை என்பது என் வாதம்

பின்குறிப்பு :

கட்டுரையை முழுவதும் மீண்டும் படித்துப் பார்த்து விட்டு பொங்கல் வைக்கவும். காவலர் தவறிழைக்க வில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர் மட்டும்தான் தவறு செய்தார் என்பதை ஏற்க முடியாது என்கிறேன். உங்களுக்கு அதில் ஒப்புதல் இல்லையென்றால் அது பற்றி எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அடுத்த தடவை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது நீங்கள் ஹெல்மெட் அணியுங்கள். .உங்களை நம்பி பின்னால் அமர்ந்து வருபவருக்கும் ஹெல்மெட் கொடுங்கள். முடியாது என்றால் அவருக்கு மட்டுமாவது கொடுங்கள். சட்டத்தை மதிக்காமல் சென்று நீங்கள் சாகலாம்.. பாவம்.. உங்களை நம்பி வந்து பின்னால் வருபவர் ஏன் சாக வேண்டும்?!

– மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்

error: Content is protected !!