புதிய வீடுகளில் சூரிய மின்சக்தி கட்டாயம்! – கலிபோர்ணியா மாகாணம் அறிவிப்பு! – AanthaiReporter.Com

புதிய வீடுகளில் சூரிய மின்சக்தி கட்டாயம்! – கலிபோர்ணியா மாகாணம் அறிவிப்பு!

பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்(வெற்றிடம்) ஆகியவற்றுடன் மனிதன் வாழ மிகத் தேவையாகி விட்ட மற்றோன்று மின்சாரம். செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மின் தேவை உலகமெங்கும் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் நம் விஞ்ஞான உலகம் அணு மின் உற்பத்தியிலிருந்து மாற்று வழிகளைத் தேடி எத்தனையோ படிகள் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறது. அதன் ஒரு படியாக அமெரிக்காவில் முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்தில் வரும் 2020ம் ஆண்டு முதல் கட்டப்படும் புதிய வீடுகளில் சூரிய மின்சக்தி கட்டாயம் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

நாம் வாழும் புவிவெப்பமயமாக்கல்,கடல் நீர் மட்ட உயர்வு,நீர் பற்றாக்குறை,பருவம்தப்பி பெய்கிற மழைப் பொழிவு,சூறாவளிப் புயல்கள்,வேதியல்மயப்பட்ட வேளாண்மையால் பாழாகிற விளை நிலம்,நோயுருகிற மக்கள்,ஆலைக் கழிவு மாசுபாடு,காடழிப்பு,மண் வளம்,நீர்வளம் மற்றும் கனிம வள அழிப்பு,காடுயிர்களின் அழிவுகள் என நாம் வாழும் பூமி அதன் வரலாற்றில் இல்லாத வகையில் பேராபத்தை எதிர்கொண்டுள்ளது.மனித சமூகத்தின் உயிர்ப்பிழைப்பையே அச்சுறுத்தும் வகையில் இயற்கைப் பேரிடர்கள் எழுச்சி பெற்று வருகின்றன.இதெல்லாம் போறாது என்று பல

நாடுகளில் மின் தேவைக்காக அனு உலை வேறு நிறுவுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்தான் கலிபோர்னியாவின் கட்டிட நியமங்கள் ஆணையத்தில் (Building Standards Commission) டிசம்பர் 5ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய வீடென்ரால் சூரிய மின் சக்தி கட்டாயம் என்ற  முடிவு எடுக்கப்பட்டது.

முன்னரே  எரிசக்தி ஆணையத்தால் இந்த புதிய திட்டம் முடிவான நிலையில் கட்டிட நியமங்கள் ஆணையத்தில் நடந்த வாக்கெடுப்பு மூலம் இந்த திட்டத்தை கட்டாயமாக்க இறுதி முடிவு செய்யப் பட்டது. இந்த புதிய திட்டம் மூலம் சுத்தமான மறுசுழற்சி செய்யக்கூடிய எரிசக்திப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.

ஆனாலும் இந்த புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட நியமங்கள் ஆணையத்திற்கு சுமார் 300 கடிதங்கள் வந்ததாக ஆணையத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.அதாவது சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் வீடுகளை கட்ட சுமார் 10,000 டாலர் வரை கூடுதல் செலவாகும் என்பதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் வீடுகளில் உள்ள சோலார் பானல் மூலம்30 ஆண்டுகளுக்கு கிடைக்கும் மின்சக்தியால் மக்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் வெகுவாக குறையும். வீடுகளைக் கட்டும் பொழுது ஆகும் கூடுதல் செலவை இந்த வகையில் ஈடுசெய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூரிய மின்சக்தி மூலம் வீட்டு உரிமையாளருக்கு மாதம் 40 டாலர் அல்லது வருடத்திற்கு 500 டாலர் வரை பணம் மிச்சமாகும். அதனால் இந்த திட்டம் மூலம் மக்களுக்கு சிறந்த சேமிப்புத் திட்டமாகிவிடும். கூடுதலாக பணம் செலவாகாது என்றும் அதிகாரிகள் கூறினர்.

சமீபத்தில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் வீடுகளை இழந்தவர்கள் மீண்டும் வீடுகளை கட்டும் போது இந்த புதிய விதிமுறை அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கலாம் என்று வாக்கெடுப் பின் போது ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்தார். ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று இந்த திட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் தெரிவித்தனர்.