அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன? – AanthaiReporter.Com

அதிமுக ‘பை லா’ – வில் இருப்பது என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா-வை தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க.வின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமானது என்று எடப்பாடி- ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூறுகிறார்கள். டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களோ சட்டவிதிகளின்படி பொதுக் குழுவால்தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். இரு தரப்பினருமே அ.தி.மு.க. சட்டத் திட்டங்களை தங்கள் வாதங்களுக்காக வலுசேர்க்கிறார்கள்.

இதையொட்டி அ.தி.மு.க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கொண்டுவந்த கட்சியின் சட்ட விதிகள், ஜெயலலிதா கொண்டுவந்த சில திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் பற்ரி தெரிந்து கொள்வோமா?:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை தொடங்கினார். அப்போது அவர் உருவாக்கிய சட்டவிதிகளை பார்ப்போம். * அ.தி.மு.க.வின் தலைமை தமிழகத்தில் இயங்கும். * அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் நேரடிப் பொறுப்பில் கழகத்தின் தமிழ் மாநில பிரிவு இயங்கும். எனவே, தமிழகத்துக்கு என தனி செயலாளர் இருக்க மாட்டார்.

* பொதுச்செயலாளர் விரும்பினால், தமிழ் மாநிலக் கழக நிர்வாகத்துக்கென ஒரு துணை செயலாளரை நியமித்துக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் நிர்வாக வசதிக்காக பொது உறுப்பினர்களில் இருந்து ஒரு துணை பொதுச் செயலாளரையும், 10-க்கும் மேற்படாத தலைமை கழக செயலாளர்களையும் நியமிக்கலாம்.

* கழகக் கொடி நீள, அகலத்தில் முறையே 3 பங்குக்கு 2 பங்கு விகித அளவில் இருக்க வேண்டும். கொடியின் நீளத்தில் சரிபாதி மேல் பகுதி கருப்பு நிறமாகவும், சரிபாதி கீழ்பகுதி சிவப்பு நிறமாகவும் இருக்க வேண்டும்.

* கழகத்தினுடைய குறிக்கோள்களையும், நோக்கங்களையும் ஏற்று, கழகத்தினுடைய சட்டத்திட்டங்களுக்குட்பட்டு கழகத்தை வளர்ப்பதற்காக உறுதியேற்று நடத்தும் 18 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண், பெண் இருபாலரும், கழகத்தின் முடிவே இறுதி முடிவு என்றும், அதற்கு எதிராக வழக்குமன்றங்களுக்கு போவதில்லை என்றும் ஏற்றுக்கொண்ட வர்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள்.

* சாதி, மத சங்கங்களிலோ, அல்லது வேறு அரசியல் கட்சி அமைப்புகளிலோ, உறுப்பினர்களாகவோ, அல்லது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டவர்கள் கழகத்தில் உறுப்பினராக இருக்கும் உரிமையை இழந்து விடுவார்.

* கழக சம்பந்தமான எந்த பிரச்சினைகள் பற்றியும் வழக்குமன்றங்களுக்கு செல்ல கழக உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை.

* தலைமைக்கழக பொதுக் குழு, கழகத்தின் முழு அதிகாரங்களை கொண்ட தலைமை அமைப்பாகும். பொதுக்குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.

* பொதுக்குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கழகத்தினுடைய அவைத்தலைவர், பொருளாளர் பொதுக் குழுவில் இடம்பெறுவர்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுச் செயலாளரால் கூட்டப்படும்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 15 நாள் முன்னறிவிப்புடன் கூட்டப்பட வேண்டும். * கழக கொள்கைகளை வகுப்பது, அவற்றை நிறைவேற்ற திட்டங்களை தீட்டுவது, கழகத்தை வழி நடத்தி செல்வது போன்ற கழகத்தை பொருத்த எல்லா நடவடிக்கைகளிலும் இறுதி முடிவு எடுக்க பொதுக் குழுவே முழு அதிகாரம் பெற்றதாகும்.

* பொதுக்குழுவின் கால அளவு பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். * பொதுச்செயலாளர்: கழகத்தின் பொதுச்செயலாளர் அ.தி.மு.க.வில் இருக்கக்கூடிய எல்லா பொதுக்குழு உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* கழகத்தின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச் செயலாளராவார். * பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், துணை பொதுச்செயலா ளரும்,  தலைமைக் கழக செயலாளர்களும், அந்த பொதுச்செயலாளரின் பதவிகாலம் வரையில் நீடிப்பர். இதற்கிடையில், பொதுச்செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, அல்லது பதவியிலிருந்து விலகினாலோ, இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரையில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கழக பணியினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

* பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில், அரசியல் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் பற்றிய கொள்கை திட்டம் ஆகியவற்றைப்பற்றி அவசரத்தின் முன்னிட்டு தக்க முடிவுகள் எடுக்க பொதுச்செயலாளருக்கு உரிமை உண்டு. அந்த முடிவுகளுக்கான ஒப்புதலை அடுத்து கூடும் பொதுக்குழுவில் பெற வேண்டும். பொதுக்குழு கூடாத நேரங்களில், குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி, நடவடிக்கை பற்றி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை பொதுச்செயலாளர் கடிதம் மூலம் கேட்டு ஒப்புதல் பெறலாம்.

* துணை பொதுச் செயலாளர்: பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்படுவார்.

* பொதுச்செயலாளர் இல்லாத நேரத்தில், துணை பொதுச்செயலாளர் அவரது பொறுப்புகளை ஏற்று பணிகளை நிறைவேற்றுவார்.

* தலைமை கழகத்தின் அவைத் தலைவர், பொதுக் குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* அவைத்தலைவர் பொதுக்குழு செயற்குழு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார். அவைத்தலைவர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவர் தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார்.

* ஆட்சிமன்ற தேர்வு குழு 7 உறுப்பினர்களை கொண்டதாகும். பொதுச் செயலாளர்- துணை பொதுச்செயலாளர் ஆகியோர்களை தவிர, 5 உறுப்பினர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, கட்சியின் சட்டத் திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவந்தார். அதில் பின்வருவனவற்றை குறிப்பிட்டு இருக்கிறார்.

* கட்சியில் இருந்து தாங்களாகவே விலகி செல்பவர்களும், பொதுச் செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களும், கட்சி உறுப்பினர் பதவியை இழக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும் போது, அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்து அவர்களது உறுப்பினர் காலம் கணக்கிடப்படும். அவர்கள் அமைப்பு ரீதியான தேர்தல்களில் போட்டியிட 5 ஆண்டுக்கு பிறகுதான் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

* இந்த விதி, பொதுதேர்தல், அல்லது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று போட்டியிட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் பொருந்தும்.

* பொதுச்செயலாளருக்கு இந்த விதியை தளர்த்த உரிமை இருக்கிறது.

* பொதுக்குழுவுக்கு கட்சியின் எந்தவொரு விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ உரிமை இருக்கிறது. ஆனால், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் விதியில் மட்டும் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது மாற்றப்படவோ, திருத்தப்படவோ முடியாது. இவ்வாறு அ.தி.மு.க. சட்ட விதிகள் கூறுகின்றன.