கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எம்ஜிஆர் பேர் வச்சாச்சு! – AanthaiReporter.Com

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு எம்ஜிஆர் பேர் வச்சாச்சு!

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என்று மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றும் போது, கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ரின் பேருந்து நிலையம் என்று மாற்றி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996-2001 ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கோயம்பேடு பேருந்து நிலையத் திட்டம் தொடங்கப் பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் நிறைவுற்றப் போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையம். தினமும் 2 ஆயிரம் பஸ்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. இங்கிருந்து தினமும் 573 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பஸ்களுக்காக 6 பிளாட் பாரங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் செல்கின்றன.

இந்நிலையில் பெயர் மாற்றம் அறிவித்தவுடன் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அடுத்தவர் குழந்தைக்குத் தன் கட்சியின் நிறுவனர் பெயரை வைக்க அதிமுக ஆசைப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.