பிரிட்டன்: பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்! – AanthaiReporter.Com

பிரிட்டன்: பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

சர்வதேச சமாச்சாரமான பிரக்சிட் விவகாரத்தில் எதிர்ப்பை சந்தித்துவரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் தேர்தலுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்ஸிட் மசோதா தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் தோல்வியடைந்ததால் தெரசா மே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பிரெக்ஸிட்டை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான பிலிப் லீ என்பவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் சமபலத்துடன் இருந்த நிலையில், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. ஒருவர் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்ததால் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் பிரக்சிட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.