எம் தலைவன் பேரழகன் பிரபாகரன் வேடத்தில் பாபி சிம்ஹா.. அய்யஹோ!

எம் தலைவன் பேரழகன் பிரபாகரன் வேடத்தில் பாபி சிம்ஹா.. அய்யஹோ!

தமிழ் இனத்தின் தேசிய தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன் இன மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடி அந்த போரில் தன் குடும்பத்தையே பலிகொடுத்தவர். உலகிலேயே முப்படை களையும் கொண்ட விடுதலை இயக்கத்தை கட்டமைத்தவர். கட்டுப்பாடான ஒரு மக்கள் அரசை நடத்திக் காட்டியவர். ஒரே நேரத்தில் 7 நாடுகளின் ராணுவத்தை எதிர்த்து போராடியவர். மன்னிப்பு கேட்க முடியாது என்று மரணத்தை பரிசாக ஏற்றவர்.

வரலாறுகளிலும், கற்பனை கதைகளிலுமே கேட்ட, படித்த மாவீரனை வாழும் காலத்திலேயே பார்த்தவர்கள் நாம். அவரது செயல்பாடும், ஆயுத அரசியலும், கொள்கையும் பிடிக்காதவர்கள்கூட அவர் மாவீரன் என்ற கருத்தில் மாறு கொள்வதில்லை.

நிகழ்கால அரசியல், சமூக சூழல் அவரது வீரத்தை, தியாகத்தை மறுக்கலாம், மறைக்கலாம், இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால் வருங்கால வரலாறு அவரை ஈடு இணையற்ற தேசியத் தலைவனாக பதிவு செய்யும்.

சேகுவாரோ வாழும் காலத்தில் போற்றப்பட்டதை விட இப்போதுதான் அதிகம் போற்றப்படுகிறார். அது போன்றுதான் தேசியத் தலைவரும் போற்றப்படுவார்.

ஆனால் அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கிறோம் என்று சொல்லி அவரை அவமானப் படுத்தாதீர்கள். ஏற்கெனவே ‘புலிப்பார்வை’ என்ற படத்தில் பிரபாகரனாக மதன் என்பவர் நடித்து எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தினார். பின்னர் அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றதெல்லாம் தனிக் கதை.

இப்போது ‘சீறும்புலி’ என்ற தலைப்பில் தேசியத் தலைவன் படம் தயாராகிறதாம். பாபிசிம்ஹா பிரபாகரனாக நடிக்க வெங்கடேஷ் குமார் என்ற புதுமுகம் இயக்குகிறாராம்.

எம் தலைவன் பேரழகன். பாபி சிம்ஹா அவருக்குச் சற்றும் பொருத்தமில்லாத நடிகர்.

பல லட்சங்களில், சில கோடிகளில் எடுக்க அவர் ஒன்றும் மாநகராட்சி கவுன்சிலர் அல்ல. மாபெரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த மகத்தான ‘நிஜ’ தளபதி.

தயவு செய்து, சிறு பட்ஜெட்டில் படம் எடுத்து அவரை சிறுமைப்படுத்தாதீர்கள்.

பிரபாகரன் வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டுமென்றால், அவர் நடத்திய யுத்தங்களை மறு உருவாக்கம் செய்யவே ஆயிரம் கோடிகள் வேண்டும்.

அவரது வாழ்க்கையை ‘உமர் முக்தார்’ போன்று ஹாலிவுட் படங்களின் பாணியில் பல ஆயிரம் கோடியில் எடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.

முடியாவிட்டால் மவுத்தையும் …..த்தையும் பொத்திக் கொண்டு இருங்கள். உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

மீரான் முகமது

error: Content is protected !!