இப்ப இன்னா சொல்லுவீங்கோ.. இப்ப இன்னா சொல்லுவீங்கோ பிஜேபியின் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் ஆகிறார்! – AanthaiReporter.Com

இப்ப இன்னா சொல்லுவீங்கோ.. இப்ப இன்னா சொல்லுவீங்கோ பிஜேபியின் எடியூரப்பா கர்நாடகா முதல்வர் ஆகிறார்!

 இந்தியாவெங்கும் நடக்க இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று மீடியாக்களால் வர்ணிக்கப் பட்ட  கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும் பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஆனாலும்  மாலை 5 மணியளவில் குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ராஜ்பவனில் நாளை காலை 9.00 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  ப சிதம்பரம்  நிருபர்களிடம் பேட்டியளித்த.போது, “காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து போதிய பெரும்பான்மை பலம் உள்ளதை ஆளுநரிடம் நிரூபித்துள் ளோம். இருப்பினும் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 117 பேரின் ஆதரவு கடிதத்தை குமாரசாமி வழங்கியுள்ளார். ஆனால், அவருக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? மாநில ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டப் பதவியில் உள்ளவர். அவர் சட்டவிரோதமான பாதையில் செல்லக் கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து, பெரும்பான்மை உள்ள அணியையே அழைத்திருக்க வேண்டும்”என்று அவர் கூறினார்.