அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் – அமித் ஷா நம்பிக்கை! – AanthaiReporter.Com

அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான் – அமித் ஷா நம்பிக்கை!

”பொய்களின் வலைதளமாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் ஓட்டை விழுந்துள்ளது. உறுதியற்ற தலைமை, தெளிவற்ற லட்சியம், ஊழல் விருப்பங்கள் கொண்டவை தான் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி. அவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகக் கூட பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குள் கொள்கை ஒற்றுமை கிடையாது.” என்று மோடி பேசினார். அத்துடன் கொள்கையும், தலைமையிலும் இல்லாத பகற்கனவு காணும் எதிர்க் கட்சிகளுக்கும், தேசியஜனநாகக் கூட்டணிக்கும் இடையேதான் மக்களவைத்தேர்தலில் போட்டி இருக்கும். மோடியின் வளர்ச்சியைத் தடுப்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே திட்டமாகும் என்றும் பாஜகவின் தேசிய செயற்குழுவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.

அதில் பேசிய அமித் ஷா, “ 2019 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, அதற்கு பின் வரும் தேர்தல்  களில் நாம் வெற்றி பெறுவோம். அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்மை யாரும் ஆட்சியில் இருந்து அகற்ற முடியாத. இதை நாம் கர்வமாக சொல்லவில்லை. நம்முடைய செயல்பாடுகளின் அடிப்படையில் இதை சொல்கிறேன்’’ என்று பேசினார்.

பிரதமர் மோடி பேசிய போது, “வானத்தில் சூரியன் போன்றவர் அடல்ஜி. அவருடைய லட்சியங்களை எடுத்து செல்லும் சிறிய நட்சத்திரங்களாய் நாம் செயல்பட வேண்டும். பொய்களின் வலைதளமாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் ஓட்டை விழுந்துள்ளது. உறுதியற்ற தலைமை, தெளிவற்ற லட்சியம், ஊழல் விருப்பங்கள் கொண்டவைதான் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி. அவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகக் கூட பார்த்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்குள் கொள்கை ஒற்றுமை கிடையாது. நம்முடைய செல்வாக்கு அதிகரித்திருப்பதுதான் அவர்கள் ஒரே பேனரின் கீழ் இணைந்து போராட நினைப்பதற்கு காரணம்.சிறிய கட்சிகள் உட்பட பல கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து நிற்பது நம்மை எதிர்ப்பதற்காகத்தான். காங்கிரசுக்குள் இருப்பவர்களுக்கு அந்த கட்சியின் தலைமை மீதே நம்பிக்கை இல்லை.

செயல்கள் மற்றும் பிரச்னைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் போராடவில்லை. பொய்களின் அடிப்படையில் அவர்கள் போராடுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் நாம் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி எதிர்க்கட்சிகளின் பொய்களை நாம் முறியடிக்க வேண்டும். நம்முடைய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினால், ஒரு குடும்பம் இந்த நாட்டை 48 ஆண்டுகள் ஆட்சி செய்த போது, செய்யப்பட்ட பணிகளுக்கும், நாம் கடந்த 48 மாதங்களில் செய்துள்ள பணிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஆட்சியிலும், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்தவர்கள்” என்றார்.

பின்னர் தேசியசெயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொள்கை இல்லா, தலைமையில்லாத, மோடியின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட எதிர்க்கட்சிகளுக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனாயக கூட்டணிக்கும் இடையே 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கும்.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும், இப்போது இருக்கும் இடங்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலான இடங்களையும், வாக்குகளையும் பெறும்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டு வந்த தீர்மானத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாத செயல்களை முழுமையாகத் தடுத்தது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நகரங்களில் அடிக்கடி குண்டு வெடிப்புகள் நடந்த நிலையில், இப்போது அது தடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார்.

பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷாஆகிய இருவரின் கூட்டணியால் எம்.பி.க்கள் எண்ணிக்கை 350ஆகவும், 1500 எம்எல்ஏக்களாகவும் உயர்ந்துள்ளது. இருவரின் கடினமான உழைப்பாலும், நீண்ட தொலைக்நோக்காலும் பாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதை நனவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பிரதமர் மோடியின் செயல்பாட்டை 70 சதவீத மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 4ஆண்டுகளாகச் சிறப்பான, முன்னெப்போதும் இல்லாத தலைவராக மோடி இருந்து வருகிறார்.

பாஜகவின் ஆட்சியில் நக்சலைட்கள் ஆதிக்கம் மூன்றில் ஒருபகுதியாகக் குறைந்துவிட்டது. ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டம் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து அகற்றப்பட்டு அமைதி திரும்பி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு இல்லாமல் வளர்ச்சிக்கான அடிக்கல் நடமுடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகிலேயே 6-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை இந்தியா கொண்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தியதன் மூலம், வருவாய் பெருகியுள்ளது. மக்களின் பிரச்சினைகளை அறிந்து அரசு செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 10 சதவீதம் இருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 5சதவீதமாகக் குறைந்துவிட்டது. அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு பாஜக ஆட்சி நடக்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்தார்

.