கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கர்நாடகா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ; பாஜக முடிவு!

கடந்த மூன்று வாரங்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வரும் கர்நாடக சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் தானாக முன்வந்து பதவி விலகா விட்டால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.

கர்நாடகத்தில் நடைபெற்று வந்த எச்.டி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த 23-ந் தேதி கவிழ்ந்தது. கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று ராஜினாமா செய்ததால், முதல்வர் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததது. அதனால் குமாரசாமி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜக உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் முடிவு எடுக்காததால், ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று பாஜக மேலிடம் அறிவுறுத்தியது.

இதற்கிடையில் ஜூலை 25ம் தேதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, மகேஷ் குமாதாலி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏவான ஆர்.சங்கர் அகிய 3 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து பாஜக மேலிடத்தின் அனுமதியுடன் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, நேற்று மாலை 6.30 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். எடியூரப்பா வரும் திங்கள் கிழமை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில் சபாநாயகர் ரமேஷ் குமார் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் திங்கள்கிழமை கர்நாடக சட்டமன்றத்தில் பாஜக அரசு பெரும்பான்மை நிரூபித்த பின் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சபாநாயகர் ரமேஷ்குமார் தானாக முன்வந்து பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை நீக்குவோம் என்று பெயர் வெளியிட விரும்பாத பாஜக எம்.எல்.ஏ ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!