இந்திய நகைகளுக்கு புதிய தர கட்டுப்பாடு விதிகள்! – AanthaiReporter.Com

இந்திய நகைகளுக்கு புதிய தர கட்டுப்பாடு விதிகள்!

சர்வதேச அளவில் நம் இந்தியாதான் தங்க நகை சந்தையில் முதலாவதாக விளங்குகிறது. கடந்த ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த ஆயிரம் டன் தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது. உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் எப்போதும் புதிய டிசைன் நகைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இப்படி இந்தியாவில் தங்கத்துக்கான `டிமாண்டின்’ பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதில், பெருமைக்காக தங்க நகை வாங்குவது ஒரு முக்கியக் காரணம். அடுத்து, 50 சதவீதத்துக்கு அதிகமான நகைகள் திருமணத்துக்காக வாங்கப்படுகின்றன. எப்போதுமே தீபாவளியை ஒட்டிய பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் விற்பனை சூடு பிடிக்கிறது. அதேபோல தங்க விற்பனை உச்சத்தை எட்டும் நேரம் மே மாதத்தில் அட்சய திருதியை. மேலும் தங்கம் வாங்குவதற்கான தூண்டுதலாக அதன் மதிப்பு, ஒரு சொத்தைப் பாதுகாக்கும் உணர்வு, தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்வது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

முக்கியமாக, தங்கத்தையும், இந்தியத் திருமணங்களையும் பிரிக்க முடியாது. நாட்டில் வருடாந்திர தங்க நகை விற்பனையில் பாதிக்கு மேல் திருமணங்களால் நடக்கிறது. இந்திய மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் சுமார் 15 கோடி திருமணங்கள் நடைபெறும் என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டின்படி, திருமணங்கள் காரணமாக நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 500 டன் தங்க நகை விற்பனை நடைபெறும். குடும்பங்களிடையே அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் தங்க நகை மூலம் மேலும் 500 டன் தங்கம் விற்பனையாகும்.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறைக்கு (ஏற்றுமதி- இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி) அதிகரிக்கும் தங்க இறக்குமதி ஒரு முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2017- 2018-ம் ஆண்டில் நாட்டின் தங்க இறக்குமதி அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்துக்கு மேல் எகிறி, 60 பில்லியன் டாலர்களாகியுள்ளது. அதன் மூலம் நடப்பு வர்த்தகப் பற்றாக்குறை `சாதனை அளவாக’ 78.2 பில்லியன் ஆகியுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் பார்த்தால் 4.2 சதவீதம். தங்க இறக்குமதியைக் குறைப்பதற்காகவே அதற்கான இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது. ஆக, நமது தங்க மோகம், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் வல்லுநர்களையே நிறைய யோசிக்க வைக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தங்க நகைகளுக்கு உரிய தர சான்றிதழ்களை தயாரித்து தரும்படி இந்திய தர நிறுவனத்திடம் (பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ்) நுகர்வோர் அமைச்சகம் கோரி உள்ளது. இந்தத் தகவலை மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நேற்று தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு தர நிலைகள் அவசியம் என அரசு விரைவில் விதிகளை வகுக்க இருப்பதாகவும் பாஸ்வான் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் 14, 18, 22 ஆகிய காரட் தரமுள்ள தங்கத்தை கொண்டு தங்க நகைகள் தயாரிக்கப்படுகின்றன. 24 காரட் தங்கத்தைக் கொண்டு முன்னர் நகைகள் செய்வதில்லை. ஏனெனில் அதற்கான தொழில்நுட்பம் அப்போது கிடையாது. ஆனால் இப்பொழுது 24 காரட் தங்கத்தை கொண்டும் நகை செய்யக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.எனவே எல்லா வகையான தங்க நகைகளிலும் தர நிலைகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. 24 காரட் தங்க நகைகளுக்கும் தர நிலைகளை வகுப்பது குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் என இந்திய தர நிறுவன இயக்குனர் ஜெனரல் சுரினா ராஜன் கூறினார்.