லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தை சரி செய்ய செலவு 742 கோடி மட்டுமே! – AanthaiReporter.Com

லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தை சரி செய்ய செலவு 742 கோடி மட்டுமே!

சர்வதேச புகழ்பெற்ற பிக் பென் கடிகாரத்தின் பராமரிப்புக்கு ரூ.742 கோடி செலவு செய்யப்படும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தில் எதை வேண்டுமானாலும் உருவாக்கி விடலாம். ஆனாலும், லண்டனில் உள்ள பிக்பென் கோபுர கடிகாரத்தை போன்று உருவாக்குவது மிகக் கடினமான விஷயம் என்றே கூறப்படுகிறது. 1800ம் ஆண்டு வாக்கில் நவீனத் தொழில் நுட்பத்துடன் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்பிரிங் மற்றும் பெண்டுலம் முறையில் உருவாக்கப்பட்ட கடிகாரங்கள் அனைத்து மக்களும் நேரத்தை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் பெரிய, பெரிய கோபுரங்களில்  வடிமைக்கப்பட்டவை. அப்படித்தான் இந்த கடிகாரத்தை லண்டனில் உள்ள பிக்பென் கோபுரத்தில் அமைத்தனர். இந்த கடிகாரமும் ஸ்பிரிங், பெண்டுலம் முறையிலேயே உருவாக்கப்பட்டு இருந்தது.

அன்றைய கால கட்டத்தில் கோபுரத்தின் ஒரு பக்கத்தில் மட்டுமே கடிகாரம் இரு்க்கும் வகையில் பொருத்துவதே வழக்கமாக இருந்தது. ஆனால், இங்கு கோபுரத்தின் 4 பக்கத்தில் இருந்தும் நேரத்தைப் பார்க்கும் வகையில் 4 பக்கத்திலும் கடிகாரத்தை அமைத்தனர்.இந்த 4 கடிகாரத்தையும் ஒரே கருவி இயங்கும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி இருந்தனர். இந்தக் கருவி மட்டுமே 5 டன் எடை கொண்டது. ராட்சத இரும்பு தூணில் கருவியைப் பொருத்தி உள்ளனர். நமது கையில் அணிந்திருக்கும் கை கடிகாரம் எப்படிச் செயல்படுகிறதோ அதே தொழில் நுட்பத்தைத் தான் இதற்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். பெரிய அளவிலான கம்பி சுருள்கள் ஸ்பிரிங் ஆக இவற்றில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. வாரத்துக்கு 3 தடவை கீ கொடுத்தால் போதும். பின்னர் தானாக கடிகாரம் ஓடும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

கடிகாரக் கருவிகள் அனைத்தும் உள்பகுதியில், தனி அறையில் அமைந்திருக்க, கோபுரத்தின் 4 பக்கமும் நேரத்தை காட்டும் கடிகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.கடிகாரத்தின் மொத்த குறுக்களவு 23 அடி. இதன் நிமிடம் காட்டும் முள்ளின் நீளம் 14 அடி, மணி காட்டும் முள்ளின் நீளம் 9.2 அடி. கடிகார எண்களின் நீளம் 2 அடி. கடிகாரத்தின் முள் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி 312 துண்டுகளால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த கடிகாரத்தில் கால் மணி நேரத்துக்கு ஒரு தடவை மெல்லிய ஒலியிலும், ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை அதிக ஒலியிலும் மணி ஒலிக்கும் வகையில் மணிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.இதற்காக கடிகாரம் அமைந்துள்ள இடத்தின் மேல் மாடியில் தனி அறையில் இந்த மணிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பெரிய வடிவிலான மணி ஒன்றும் 4 சிறிய மணிகளும்பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அப்படி பெருமை வாய்ந்த 150 ஆண்டுகளை கடந்து ஓயாமல் சூழன்றுகொண்டிருந்த இந்த பிக் பென் கடிகாரம் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளுக்காக கடந்த 2017 ஆகஸ்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், கடிகார பழுது பணிக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்படும் எனவும் பிரிட்டன் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான செலவு திட்டமிடப்பட்டதைவிட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி கடிகார பழுது பணிக்காக ரூ.742 கோடி செலவிடப்படும் என்று அந்த நாட்டு அரசு தற்போது அறிவித்துள்ளது.