இன்னாது,, அட்வகேட் தப்புச் செஞ்சா கோர்ட் ஜட்ஜ் தண்டனைக் குடுப்பாரா ? செல்லாது,, செல்லாது! – பார் கவுன்சில்

இன்னாது,, அட்வகேட் தப்புச் செஞ்சா கோர்ட் ஜட்ஜ் தண்டனைக் குடுப்பாரா ? செல்லாது,, செல்லாது! – பார் கவுன்சில்

நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, வக்கீல் தொழிலில் இருந்து நிரந்தரமாகவோ, தற்காலிகமாக நீக்கும் அதிகாரத்தை ஐகோர்ட் மற்றும் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் நீதிபதிகளுக்கு வழங்கி, வழக்கறிஞர் சட்டத்தின் மீது ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. வக்கீல்கள் மீது ஐகோர்ட், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் இந்த சட்டத்திருத்தம் வக்கீல்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வக்கீல்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது. அந்த அதிகாரம் பார் கவுன்சிலுக்கு மட்டுமே உள்ளது என்று பல வக்கீல்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

court may 28

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணை தலைவர் பி.எஸ்.அமல்ராஜிடம் கேட்டபோது “வழக்கறிஞர் சட்டம் 1961-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, தவறு செய்யும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முழுவதும் சம்பந்தப்பட்ட மாநில பார் கவுன்சில் அல்லது அகில இந்திய பார் கவுன்சிலுக்கு மட்டுமே உள்ளது. வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்யலாம். அதற்காக நேரடியாக வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

ஏற்கனவே, மூத்த வக்கீல் ஒருவர் மீது ஒரு மாநில ஐகோர்ட் இதுபோன்ற நடவடிக்கை எடுத்தது. அதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் பார் கவுன்சிலுக்கு மட்டுமே உள்ளது’ என்று தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது.அதனால், ஐகோர்ட் கொண்டு வந்துள்ள இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், கண்டிப்பாக இந்த சட்டத்திருத்தம் ரத்து செய்யப்படும்.

மேலும், ஐகோர்ட் செய்யும் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக பார் கவுன்சில் உடனுக்குடன் தவறு செய்யும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படி இருக்கும்போது, அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்துக் கொள்வது, வழக்கறிஞர் சட்டத்தின் பிரதான விதிகளுக்கு எதிராக இருப்பதாக கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.

error: Content is protected !!