லாக்கர் நகைகள் திருட்டு போனால் வங்கிகள் பொறுப்பு கிடையாது! – ரிசர்வ் பேங்க் தகவல் – AanthaiReporter.Com

லாக்கர் நகைகள் திருட்டு போனால் வங்கிகள் பொறுப்பு கிடையாது! – ரிசர்வ் பேங்க் தகவல்

நம் நாட்டிலுள்ள பல வங்கிகளில் லாக்கர் வசதியே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் எல்லோருக்கும் அந்த லாக்கர் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்த நிலையில் வங்கிகளில் லாக்கர் உள்ளவர்கள் அதை பயன்படுத்த, வங்கிகளில் உள்ள அதிகாரியை அணுகவேண்டும். அவர் லாக்கர் உள்ளவரின் கையொப்பத்தை ஒரு லெட்ஜரில் பெற்றுக்கொண்டு அதை அவரின் பதிவு செய்யப்ப ட்ட கையொப்பத்துடன் ஒப்பிட்ட பிறகு, (பல நேரங்களில் கையொப்பத்தை ஒப்பிடுவது கிடையாது) வங்கி அதிகாரி லாக்கர் அறைக்கு சென்று அவரிடம் இருக்கும் ஒரு சாவியை லாக்கரில் போட்டு திறப்பார் பின்னர் லாக்கர் வசதி உள்ளவர் அவருடைய சாவியை போட்டவுடன் லாக்கர் திறக்கும். உடனடியாக, ஆபிஸர் அந்த இடத்தை விட்டு சென்று விடுவார். இப்போது அந்த அறையில் லாக்கர் உள்ளவர் மட்டுமே இருப்பார். பொதுவாக லாக்கர் அறைக்கு சென்றவர்கள் குறைந்தது 10 நிமிடங்களாவது இருப்பார். தனது லாக்கர் உபயோகத்தை முடித்துவிட்டு வங்கி அதிகாரியிடம் சொல்லிவிட்டு (பலர் சொல்லுவதில்லை) சென்ற பிறகுதான் வங்கி அதிகாரி மற்றொருவரை லாக்கர் ரூமில் அனுமதிப்பார். தனியாக லாக்கர் அறையில் இருக்கும் ஒருவர், மற்றவரின் லாக்கரை ஏதாகிலும் முறையில் திறந்து அதில் உள்ள பொருள்களை எடுத்தால் என்ன செய்வது? லாக்கர் அறையில் விதிகளின்படி கேமராக்கள் பொறுத்தப்படுவதில்லையாதலால் அவ்வாறான தவறுகளை கண்டு பிடிப்பது மிக கடினம்.

வெளிநாடுகளில், ஒவ்வொரு லாக்கருக்குள் தனியாக வெளியே எடுக்கும் வகையில் ஒரு பெட்டக வசதி உண்டு. ஆபிஸர் லாக்கரை திறந்தவுடன், அவர் முன்னரே, லாக்கர் உரிமையாளர் அவரது லாக்கரில் உள்ள பெட்டகத்தை எடுத்துக்கொண்டு (அதற்கும் தனி லாக் வசதி உண்டு), மற்றொரு தனி அறைக்கு சென்று விடவேண்டும். அங்குதான் உங்கள் பொருள்களை வைப்பதோ அல்லது எடுக்கவோ செய்யலாம். அந்த அறையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்காது.

வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் நகைகள் உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருட்கள் திருட்டுபோனால் வங்கிகள் பொறுப்பாக முடியாது. வாடிக்கையாளர்களே காப்பீடு செய்துகொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், வங்கிகளில் நகைகள் திருட்டு போனால் அதற்கு இழப்பீடு தருவது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் 19 பொதுத்துறை வங்கிகள் அளித்த பதிலில், ’வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவானது, உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் என்ற அடிப்படையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், வங்கிகளில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொருட்களின் உரிமையாளரே பொறுப்பாகும்.இன்னும் சில வங்கிகள், லாக்கர்க ளில் வைக்கப்படும் பொருட்களை, வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பம் மற்றும் முயற்சி ஆகியவற்றின் கீழ் வைக்கிறீர்கள் என கையெழுத்து வாங்கப்படும். லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது, அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றிற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பாகாது. போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ள பொதுவான நடைமுறை. தேவைப்பட்டால் வாடிக்கையாளர் களே காப்பீடு செய்து கொள்ளலாம்’இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளை எதிர்த்து குஷ் கல்ரா மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில், லாக்கர்களில் உள்ள பொருட்கள் மூலம் வாடிக்கையாளருக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் குறித்து கணக்கெடுத்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. வாடகை கொடுத்து லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொறுப்பேற்கவில்லை என்றால், அங்கு ஏன் பொருட்களை வைக்க வேண்டும். வீட்டிலேயே வைத்து கொள்ளலாமே. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, உள்ளிட்ட வங்கி கள் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. நுகர்வோரின் நலனை பாதிக்கும் வகையிலும், போட்டியை தவிர்க்கும் வகையிலும் இந்த வங்கிகள் கூட்டணி அமைத்து செயல்படுகின்றன. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.