நாமக்கல்லில் முட்டை மட்டுமில்லீங்கோ: குழந்தைகளும் விற்பனையாகுது! – ஆடியோ

நாமக்கல்லில் முட்டை மட்டுமில்லீங்கோ: குழந்தைகளும் விற்பனையாகுது! – ஆடியோ

நாமக்கல் மாவட்டத்தில், முட்டை வியாபாரம் ரொம்ப பிரபலம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே ஊரில் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் ஆகியவற்றை வாங்கி வந்து, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யும் சம்பவம் அதிகரித்து கொண்டே போகிறது. அதிலும் இந்த கும்பலுக்கு, விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளது அதிர்ச்சிடைய யெதுள்ளது. ஆண் குழந்தையின் அழகான தோற்றம், கலர் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை பாக்கியம் இல்லாத ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அந்த செவிலியர், நான் கடந்த 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். இதனால் செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். முன் பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் குழந்தையை முன்பதிவு செய்துகொள்ள முடியும். குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும் ரூ.70 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுக்கிறேன் என அவர் கூறுகிறார். இந்த செவிலியரின் இந்த ஆடியோ பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான விவகாரத்தில் முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலார் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது குறித்து நம் நாமக்கல் மாவட்ட நிருபர், “குழந்தைகளை விற்பனை செய்து வந்ததாக எழுந்த புகாரில் நாமக்கல் அரசு மருத்துவமனையின் முன்னாள் செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தை விற்பனை தொடர்பாக அமுதா பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறைச் செயலர் அளித்த புகார் மீது நாமக்கல் காவல் காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தார்.அமுதாவிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவரும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவர் ரவிச்சந்திரனும் இன்று கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, அமுதா அளித்த வாக்குமூலத்தில் 3 குழந்தைகளை விற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 30 வருடங்களாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் செவிலியரின் ஆடியோவில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவமனை செவிலியராக இருந்த அமுதா, குழந்தை விற்பனையைத் தொழிலாக மாற்றிக் கொண்டு, அதில் கிடைக்கும் அதிக வருமானத்தால், தனது அரசுப் பணியையே விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்துள்ளது அந்த ஆடியோவில் தெரிய வந்துள்ளது. அவர் விற்பனை செய்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து திருடப்படும் குழந்தைகளா அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு வரும் குழந்தைகளா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் எடை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தையின் விலையை அமுதா நிர்ணயித்திருப்பதும் தெரிய வந்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நர்ஸ் அமுதாவின் ஆடியோ உரையாடல் இதோ…

 

error: Content is protected !!