அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி : தீர்ப்பு முழு விபரம் – AanthaiReporter.Com

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி : தீர்ப்பு முழு விபரம்

உத்தரபிரதேசத்திலுள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் அதே பகுதியில் முஸ்லீம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது- அதன்படி, காலை 10.30 மணியளவில் தொடங்கி 11 மணி வரை தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்தார். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த 5 நீதிபதிகள் அமர்வும் ஒருமித்த தீர்ப்பை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் தீர்ப்பு விவரம்…

நாங்கள் 5 நீதிபதிகளும் ஒருமித்த ஒரே தீர்ப்பை வழங்க இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. அயோத்தி விவகாரத்தில் நாங்கள் எடுத்துள்ள முடிவு ஏகோபித்த ஒரு மனதான முடிவாகும்.அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும். எனவே சன்னி அமைப்புக்கு எதிராக ஷியா அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இந்த தீர்ப்பை வாசித்து முடிக்க சுமார் 30 நிமிடம் ஆகலாம். ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதநம்பிக்கையை தடுப்பதாக இருக்க கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மதச் சார்பின்மையே அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்பாகும். எனவே நடுநிலையை காக்கும் பொறுப்பில் நீதிமன்றம் உள்ளது. அதற்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடும் நிர்மோகி அஹாரா என்ற அமைப்பு ஆதாரங்களை காட்டவில்லை. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை.அந்த அமைப்பு வழிபாடு செய்வதற்கான எந்த அதிகா ரத்தையும் பெற்றதாக தெரியவில்லை. ஆனால் இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் இருக்கிறது. என்றாலும் அந்த அமைப்பு வழிபாடு தொடர்பாக உறுதியான தகவலை தரவில்லை.

மதங்களுக்குள் இருக்கும் உரிமையை சுப்ரீம் கோர்ட்டு மதிக்கிறது. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தை முஸ்லிம்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள். ஆனால் ஒரு இடத்தின் உரிமையை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு முடிவு செய்ய முடியாது. 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு எந்த தடையும் இருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது இடம்தான் என்பதை இஸ்லாமிய அமைப்புகளால் நிரூபிக்க இயலவில்லை.

1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிய செயலாகும். அதை ஒரு போதும் ஏற்க இயலாது. இது தொடர்பாக அலகாபாத் கோர்ட்டில் நடந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பும் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஏற்புடையது அல்ல.சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது தவறாகும். 3 அமைப்புகளும் முழுமையான ஆவணங்களை தரவில்லை.

சர்ச்சைக்குரிய நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய நிர்மோகி அஹாரா அமைப்பு தேவையான ஆவணங்களை தரவில்லை. எனவே அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதற்கு பதில் ராம்லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.மேலும் இஸ்லாமிய அமைப்பு களில் ஷியா அமைப்பின் கோரிக்கையை ஏற்க இயலாது. அந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சன்னி வக்பு வாரியத்தின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் மத்திய அரசுக்கு உரிமை உடையதாகும். அந்த நிலத்தின் உரிமையும், பராமரிப்பு உரிமையும் மத்திய அரசு வசமே இருக்கும்.அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. மத்திய அரசு அதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராம ஜென்ம பூமி அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கான நிலத்தை ராம்லல்லா அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த நிர்வாக அமைப்பில் நிர்மோகி அஹாரா அமைப்புக்கும் ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்கி சேர்த்துக் கொள்ளலாம்.முஸ்லிம்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். சன்னி வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கரில் அந்த மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்.இந்த உத்தரவுகளை மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் செயல்படுத்த வேண்டும். 3 மாதம் இதற்காக இரு அரசுகளுக்கும் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் மத்திய அரசு சர்ச்சைக்குரிய இடத்தை சரி செய்து வழங்க வேண்டும்.

அயோத்தி நிலம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசும், உத்தரபிரதேச மாநில அரசும் ஒருங்கிணைந்து அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.


–வழக்கின் பின்னணி—

பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்து வரும் ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கானது நிர்மோஹி அகாரா, உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் ராம்லல்லா விராஜ்மான் இடையேயான 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை பங்கீடுதல் குறித்த வழக்கில் கடந்த 2010 செப்டம்பர் 30, அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அலகாபாத் உத்தரவை மேல்முறையீடு செய்யும் விதமாக நடைப்பெற்று வந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய் சந்திரசூட், அசோக் பூஷண், மற்றும் எஸ் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு அன்றாட விசாரணை அடிப்படையில் விசாரித்து அக்டோபர் மாதம் தனது தீர்ப்பினை முன்பதிவு செய்தது.

68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது.