குழந்தை பாலியல் : வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு 6 வருடங்கள் சிறை!

குழந்தை பாலியல் : வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு 6 வருடங்கள் சிறை!

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களை சகித்துக்கொள்ள முடியாது என போப்பாண்டவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் கத்தோலிக்க தேவால யங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வாடிக்கனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

உலகின் பல நாடுகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பல வருடங்களாக குழந்தைகள் சில பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மை தான் என்று கடந்த மாதம் போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பல மூத்த கத்தோலிக்க பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்தன. அவற்றில் குறிப்பாக வாட்டிகனின் பொருளாளரும் போப் பிரான்சிஸின் முன்னாள் மூத்த ஆலோசகருமான கார்டினல் ஜியார்ஜ் பெல் மீது பாலியல் புகார் கூறப்பட்டது.

ஜியார்ஜ் பெல், கடந்த 1990களில் ஆஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் உள்ள செயிண்ட் பாட்ரிக் தேவாலயத்தில் பணியாற்றிய போது தேவாலயத்தின் இசை குழுவை சேர்ந்த இரண்டு சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கார்டினல் ஜியார்ஜ் பெல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து வாட்டிகனின் மூன்றாவது அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவியில் இருந்து கார்டினல் ஜியார்ஜ் பெல் கடந்த மாதம் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று கார்டினல் ஜியார்ஜ் பெல் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. மாகாண நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பீட்டர் கிட் குற்றவாளியான கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மூன்று வருடங்கள் 8 மாதங்கள் சிறை தண்டனைக்கு பிறகே அவருக்கு பரோல் வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் கார்டினல் ஜியார்ஜ் பெல் மீது அதிக நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களின் நம்பிக்கையை பெல் உடைத்துவிட்டார். தன் பதவி மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் செய்த செயல் மிகவும் வெட்கக்கேடானது. கார்டினல் ஜியார்ஜ் பெல்லின் இந்த செயல் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களின் வாழ்க்கையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தலைமை நீதிபதி பீட்டர் கிட் சாடினார்.

கத்தோலிக்க தேவாலயங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பலர் கார்டினல் ஜியார்ஜ் பெல்லுக்கு வழங்கப்படும் தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

அவர்களில் சிலர் இந்த தண்டனை மிகவும் குறைவு என கருத்து தெரிவித்தனர். மற்ற சிலர் நீதி கிடைத்ததற்காக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Posts

error: Content is protected !!