மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட பாக். கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி கனடாவில் தஞ்சம்!

மத நிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட பாக். கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி கனடாவில் தஞ்சம்!

நபிகளை சுட்டிக் காட்டி மத நிந்தனை வழக்கில் சிக்கி மரண தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண் ஆசியா பீவி (ஆசியா நோரீன்), கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

முகம்மது நபியைப் பற்றி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சக பெண்களிடம் அறுவடையின் போது தவறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஆசியா பீவி. 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு மரண தண்டனை அளித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவரது மரண தண்டனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் எழ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் மதவாத அமைப்புகள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன.

அதே சமயம் தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனையடுத்து ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
ஆனால் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவி நாட்டை விட்டு செல்ல அனுமதிக்க கூடாது என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தைக் கைவிட்டன.

இதற்கிடையே, சிறையில் இருந்து விடுதலையான ஆசியா பீவி, நெதர்லாந்து அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் தகவல் பரவின. இதனால் ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அரசு அனுமதிக்கக்கூடாது என கூறி எதிர்க்கட்சியினர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது ஆசியா பீவி பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், கனடாவிற்கு சென்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது கிடைத்த தகவல்படி ஆசியா பீவி ஏற்கனவே கனடாவிற்கு வந்து சேர்ந்துவிட்டதாகவும், கனடாவில் அவரது மகள்களுடன் சேர்ந்துவிட்டதாகவும் ஆசியா பீவியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் ஆசியாவுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!