வெயில் – வழக்கம் போல் வறுத்து எடுக்கப் போகுது! – AanthaiReporter.Com

வெயில் – வழக்கம் போல் வறுத்து எடுக்கப் போகுது!

கிட்டத்தட்ட கடந்து போய் விட்ட குளிர் காலத்தில் ( 2017-18) கடந்த 29ம் தேதியுடனான காலத்தில், மொத்தம் 19 நாட்கள் அல்லது 95 மணி நேரம் மூடு பனி இருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின் படி, முந்தைய ஆண்டுகளுடன் ( 2014-15, 2015-16, 2016-17) ஒப்பிடும் போது, இந்தாண்டு மூடு பனி குறைவாக உள்ளது. இந்த குளிர்கால பருவத்தில் மொத்தம் 95 மணி நேரம் அல்லது 19 நாட்கள் மட்டுமே பனி மூட்டம் இருந்தது. 2014-15ல் 29 நாட்கள் ( 174 மணி நேரம்) 2015-16ல் 20 நாட்கள் ( 93 மணி நேரம்) 2016-17ல் 26 நாட்கள் ( 120 மணி நேரம்) இருந்தது. இதனிடையே இந்த ஆண்டு கோடை காலத்தில், முந்தைய ஆண்டுகளில் நிலவிய வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக (0.5 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்”மலைப்பகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில்கூட வழக்கமான அளவை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரலாம். டில்லி மற்றும் அதனை சுற்றி யுள்ள அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வழக் கமாக நிலவும் வெப்ப அளவை விட ஒரு டிகிரி செல்சியஸூக்கும் அதிகமாக வெப்பம் நிலவும்.தமிழ்நாடு, தெற்கு கருநாடக உள் பகுதிகள், ராயலசீமா ஆகிய பகுதிகளிலும் நடப்பு கோடை யில் வெப்ப அளவு 0.5 டிகிரி செல்சியஸிலிருந்து ஒரு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல், கிழக்கு, மேற்கு ராஜஸ்தான், உத்தரகண்ட், கிழக்கு மேற்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், விதர்பா, குஜராத், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் கடும் கோடை எதிர்பார்க்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்கமான வெப்பநிலை என்ற சொற்றொடர் 1981 முதல்2010 -வரையிலான மார்ச்-மே வெப்ப அளவைக் குறிக்கிறது என்ற வகையில், 1901 ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டுதான் 4 ஆவது கடும் கோடைக் காலத்தை பார்க்க முடிந்ததாகவும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், கடல் மேற்புற வெப்ப நிலை அதிகரிப்பே, கோடை வெயிலுக்கு காரணம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனிடையே, கடந்த செவ்வாயன்று பாலக்காடு முதல் மும்பை வரை இந்தியாவின் பல பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமான வெயில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறுகையில், ”இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முந்தைய (மார்ச்-மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு சமீபத்தில் கோடைகாலத்தில் நிலவும் வெப்பநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது, முந்தைய ஆண்டுகள் அதே காலகட்டத்தில் இருந்த வழக்கமான வெப்பநிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இயல்பை விட உயரும்பட்சத்தில் அதுகுறித்து தெரிவிக்கப்படும்” என்று எஸ்.பாலசந்திரன் தெரிவித்தார்.