ஜெ. பாணியில் வீடு தேடி வந்து அரசாங்க சேவை! – டெல்லியில் கெஜ்ரிவால் தொடக்கம்! – AanthaiReporter.Com

ஜெ. பாணியில் வீடு தேடி வந்து அரசாங்க சேவை! – டெல்லியில் கெஜ்ரிவால் தொடக்கம்!

நம் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கடந்த 24.2.2013 அன்று அம்மா திட்டம் என்ற ஒரு திட்டம் வருவாய் துறை மூலம் துவக்கப்பட்டது. ’அனைத்து கிராமங்களுக்கும் சென்று அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்’ (Assured Maximum Service to Marginal People in All Villages) என்பதன் வார்த்தை சுருக்கம்தான் அம்மா திட்டம். இதன்படி கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்),. குடும்ப அட்டைகளில் மேற் கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்புமற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு குடிமைச் சான்று களுக்கு தங்கள் கிராமத்தை உள்ளடக்கிய வட்ட அலுவலகங்களுக்கும், மாவட்ட வருவாய் அலுவலகங்களுக்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது.

இதை மாற்றி வருவாய் துறை ஊழியர்கள் குறிப்பிட்ட தினத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக சென்று முகாமிடுவார்கள். அந்த கிராமத்து மக்களின் அலைக்கழிப்பைத் தடுத்து அவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களைக் கொடுத்து உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள். இந்தத் திட்டம் தமிழகத்தின் கிராமப்புற மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. பின் இது சென்னை போன்ற மாநகரங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. கிராமம் கிராமமாக தேடிச் செல்லும் இந்த அம்மா திட்டத்தின் பாணியில் பொதுமக்களின் வீடு தேடி வந்து அரசாங்க சேவைகளை வழங்கும் புதிய திட்டம் டெல்லி மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களின் அத்தியாவசிய சேவைகளான திருமண பதிவுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், ஓட்டுநர் சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கும் புதிய திட்டம் ஒன்றினைச் செயல்படுத்த டெல்லி மாநில அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. அதன்படி டெல்லி தலைமைச் செயலகத்தில் இந்தப் புதிய திட்டத்தினை மாநில முதல்வர் கெஜ்ரிவால் நேற்று துவங்கி வைத்தார். அவருடன் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் 1076 என்ற தொலைபேசி எண்னை அழைத்து தங்களுக்கு வேண்டிய சேவைகளைக் குறிப்பிட்டால், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘மொபைல் ஸஹாயக்’ என்னும் நடமாடும் வாகனங்கள் மூலம் சேவைகள் அவர்களது வீடு தேடி வரும். இந்த சேவைகளுக்கு அவர்கள் ரூ. 50 மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும்.

மாநிலத்திலுள்ள 11 மாவட்டங்களுக்கும் தலா 6 வீதம் ‘மொபைல் ஸஹாயக்’ வாகனங்கள் வழங்கப் பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த சேவை குறித்த புகார்கள் அல்லது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் முன்னர் குறிப்பிட்ட 1076 தொலைபேசி எண்ணுக்கு அழைத்துக் கூறலாம்.காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவைகள் கிடைக்கும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது:

ஆட்சி நடைமுறையில் ஒரு பழைய சகாப்தம் முடிந்து புதிய சகாப்தம் துவங்குகிறது. இனி பொதுமக்கள் அரசு சேவைகளுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அரசு சேவைகள் உங்களைத் தேடி உங்கள் வீட்டு வாசலுக்கே வருகிறது. டெல்லி அரசாங்கம் வழங்கும் எல்லா வித சேவைகளையும் இதன் மூலம் தர நான் விரும்புகிறேன். அரசு சேவைகள் இவ்வாறு பொதுமக்கள் இல்லம் தேடி வருவது என்பது நாட்டிலேயே அல்லது உலகத்திலேயே இதுதான் முதன்முறையாகும்.

பாஜக, மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் மூவரும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த திட்டம் சாத்தியமானதிற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே. முதலாவது சாதாரண மனிதனின் வாழ்வினை எளிமையாக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பம் மற்றும் தூய்மையான சிந்தனை. இந்த திட்டத்தில் குறைகளிருக்கலாம். ஆனால் அந்தக் குறைகளைக் களைந்து இதனை சிறப்பாக செயல்படுத்துவோம். விரைவில் பொது விநியோக திட்டத்தினையும் இதன் மூலமே செயல்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.