அருவி – திரை விமர்சனம் = ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்! – AanthaiReporter.Com

அருவி – திரை விமர்சனம் = ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்!

நம்ம தமிழ் சினிமா ஒவ்வொன்றும் எத்தனையோ சோதனைகளை கடந்துதான் திரைக்கு வருகிறது. அப்படி வந்தவைகளில் ரசிகர்கள் மனம் கவரும் படைப்புகள் அரிதாகவே இருக்கிறது. அந்த அரிதான காரியத்தை எளிதாக செய்து பெரும்பாலாலோனோர் மனத்தை கவர்ந்து விட்டது அருவி திரைப்படம். இத்தனைக்கும் இந்த அருவி தயாராகி சில பல ஃபிலிம் பெஸ்டிவெல்களில் ரிலீஸாகி பாராட்டும், அவார்டும் வாங்கி, மேலும் பல பர்சனாலிட்டி களுக்கென தனிப்பட்ட திரையிடல் போடப்பட்டு சபாஷூம் வாங்கிய திரைப்படம்தான் அருவி. அநேகமாக இப்படி பொது ரசிகர்களின் பார்வைக்கும் போகும் முன் பிரமாதம் என்ற பெயெரெடுத்த பல சினிமாக்கள் சராசரி ரசிகனுக்கு பிடிக்காமல் போய் இருக்கிறதை பார்த்துள்ளோம். ஆனால் இந்த அருவி ஆஹா.. ஓஹோ .. பேஷ்.. பேஷ் .. பேஷ் – என்று ஒவ்வொருவரையும் சொல்ல வைத்து விட்டது என்றே சொல்லலாம்.

பல்வேறு படங்களில் நாயகியை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருப்பதை பார்த்திருக்கலாம், குறிப்பாக மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் , அவர் தொடங்கி அண்மையில் அரங்கேற்றம் கோபியின் அறம் வரை எக்கச்சக்கமானோர் ஹீரோயினை மையப்படுத்திய திரைப்படங்களை இயக்கியுள்ளனர். ஆனால் அழகு-க்கு இன்னொரு வடிவம் கொடுக்கும் இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையை 90களில் உலகை மிரட்டிய ஒரு துளி சமாச்சாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் நடப்பு அரசியலையும், சின்னத்திரை சந்தைக்கான போக்கையும், காணாமல் போய் விட்ட இரக்க உணர்வு + குடும்ப உறுப்பினர்களிடையே உண்மையான அன்பு குறைந்து போனது மற்றும் மனிதப் பார்வைகளில் தற்போது அதிகம் மிளிரும் காமத்தின் போக்கு என்று ஜஸ்ட் சிங்கிள் திரைப்படத்தில் சகல சமாச்சாரங்களையும் கேஷூவலாக தழுவி செல்வது அருவியின் ஸ்பெஷல்.

அதிலும் இப்படத்தின் இயக்குனர் அருண் பிரபு என்ற புது முக இயக்குநர் பாலு மகேந்திரா-விடம் மாணவனாக இருந்து, இயக்குனர் கே. எஸ். ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதை அறிந்த போது ’அதானே’ என்று சொல்ல தோன்றுகிறது. அத்துடன் இந்த அருவி யின் திரைக்கதை 2013 ஆம் ஆண்டு உறுதி செய்யப்பட்டு, அதற்க்கான நாயகியை தேட 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆடிசன் எடுத்து செல்க்ட் செய்யப்பட்டார் என்ற தகவலும் தெரிந்த நிலையில் திரையில் விரியும் காட்சிகள் வாயை பிளக்க வைப்பதென்னவோ நிஜம்.

அருவி என்ற கேரக்டரில் வரும் அதிதி – நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற சாயலில், நம் வீட்டு பெண்ணுக்கு உள்ள ரொம்ப சிம்பிளான மனோ நிலையோடு வாழ்ந்து வரும் இளம்பெண். அவ|ளுக்கு ஒரு விபத்து + பிரச்னை காரணமாக பெரிய பிரளயம் ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேற நேர்கிறது. இரண்டு பைகளோடு தெருவில் இறங்கும் அவள் ‘தீவிரவாதி’ அருவியாக மாறி விடுகிறாள். ஏன்? எப்படி என்பதை விவரிப்பதுதான் அருவி.

மறைந்து போன ஊர்சரி அவார்ட் வின்னர் ஷோபா-வை நினைவூட்டும் நிறைவான முகம், அழகான உதட்டு கோணல் சிரிப்பு, கொஞ்சமான கண் சிமிட்டல்கள், சோகமாக இருக்கும் போதே வீம்புடன் முறைப்பது என்று சகல அஷட முக மாறுதல்களுக்கு தயாராகி நம்மை பிரமிக்க வைக்கிறார் அதிதி., அதிலும் தன் டயலாக்குகளிலும், குரலிலும் இவர் காட்டியிருக்கும் மெனகெடலில் இயக்குநரின் பங்கும் இருக்கும் என்றாலும் இந்த சின்ன பெண் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் இவர் ஒரு ரியல் வக்கீல் என்பது அடிசினல் தகவல். கூடவே பயணம் செய்யும் திருநங்கை எமிலியாக நடித்துள்ள அஞ்சலி வரதன் கூட ரொம்ப இயல்பாக நடித்துள்ளார்.. `

அதே சமயம் ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைச் ’சொல்வதெல்லாம் சத்தியம்’ எனச் மாற்றி வைத்துக் கதையை கொண்டு செல்கிறார்கள். அவ்வப்போது டி வி காமெடி ஷோ-க்களை நினைப்படுத்தினாலும் அடிக்கடி அதிதி கேரக்டரை ரொம்ப பாந்தமாய் பொருத்தி காணும் காட்சியை நம்ப வைப்பதில் ஜெயித்தும் விடுகிறார்கள்

ஆனாலும் ரியாலிட்டி ஷோ இயக்குநராக இயக்குநர் அருண்பிரபு. துணை இயக்குநராக நடித்திருக்கும் பிரதீப் ஆண்டனி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக நடித்திருக்கும் லஷ்மி கோபால்சுவாமி, சுபாஷாக வரும் விடலைப் பையன், தமிழைக் கடித்து துப்பும் போலீஸ் அதிகாரி எல்லாவ்ற்றையும் விட அவ்வப்போது “ரோல்ல்ல்லிங் சார்ர்ர்ர்” என்ற குரல் என்று சப்ததிற்கும் தனி அந்தஸ்தை தந்துள்ளார் இயக்குநர்.

ரொம்ப சாதாரண  லொகேசன்கள்தான். என்றாலும் அதை பொறுப்புணர்ந்து வழங்கியதில் தனி கவனத்தை பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட். குறிப்பாக அழகான அந்தக் குழந்தையின் அழகுச் சிரிப்பு, நடை, அருவியின் பதிவுகள் தொடங்கி ஒவ்வொரு ஃப்ரேமையும் அவ்வளவு அழகாய் பதிவு செய்துள்ளார். இசையும் மிகப் பெரிய பலம் சேர்த்து உள்ளது.

அதே சமயம் கொஞ்சம் அரத பழசாகிப் போன ‘அந்த விவகாரம்’ இப்படி எல்லாம் பரவும் என்று தற்போது நம்புவதற்கு கஷ்டமாக இருப்பதுடன் அந்த ரியாலிட்டி ஷோ-வை மையப்படுத்தியே இடைவேளைக்கு பிறகு அதிலும் ஒரு கைத்துப்பாக்கியை காட்டியே நகர்த்துவது ஒட்டாமல் போய் விடுகிறது. ஆனாலும்  படத்தின் யதார்த்த  வசனங்கள் + நடிப்பு + இயக்குநரின் உழைப்பில் லயித்து போய் விடுவதென்னவோ நிஜம். கூடவே இப்படியொரு திரைப்படத்தை தயாரிக்க முன் வந்த புரொடியூசருக்கு ஒரு பொக்கே பார்சல் அனுப்பியே ஆக வேண்டும்

மார்க் 5 / 3.75!