ஆர்டிபிஷியல் காலுடன் அனாயசமாக எவரெஸ்டில் ஏறிய அருணிமா!

ஆர்டிபிஷியல் காலுடன் அனாயசமாக எவரெஸ்டில் ஏறிய அருணிமா!

ஒட்டு மொத்தமான உலகில் ரொம்ப உயரமான மலைத் தொடரான இமய மலைத் தொடர் இந்தியா, நேபாளம், சீனா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் வரை நீண்டு செல்கிறது. இந்த மலைத்தொடரில் அமைந்திருக்கும் எவெரெஸ்ட் சிகரம்தான் உலகின் உயரமான பகுதியாக உள்ளது. நேபாளத்தில் உள்ள இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டதிலிருந்து 29,000 அடி ஆகும். மிக மிக உயரமான, பயங்கரமான இந்த சிகரத்தின் உச்சிக்கு சென்று சாதித்தவர்களை விட அதை அடைய முடியாமல் கீழே விழுந்து உயிரிழந்தவர்கள் அதிகம். அதிலும் இரண்டு கால்கள் இருக்கும் எல்லாருக்கும் இமய மலை ஏறி எவரெஸ்ட் சிகரத்தைத் தொட முடிவதில்லை. ஆனால் அருணிமா என்ற பெண்மணி ஒரு செயற்கைக் காலுடன் எவரஸ்ட் சிகரம் தொட்டு சாதனை படைத்திருக்கிறார். அருணிமா பிறக்கும் போது ஊனக் காலுடன் பிறக்கவில்லை. என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்:

lady may 12

“”எங்கள் குடும்பம் நடுத்தரக் குடும்பம். சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். 1988-இல் பிறந்தேன். தந்தை, ராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தாய், சுகாதாரத் துறை பணியாளர். எனக்கு ஓர் அக்கா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. எனது ஆறாவது வயதில் தந்தை மர்மமாக இறந்துவிட்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அண்ணன் கொல்லப்பட்டார். நாங்கள் மனதளவில் சிதைந்து போனோம்.

அக்காவை, ஓம் பிரகாஷ் எனும் ராணுவ வீரர் திருமணம் செய்துகொண்டார். அவர் வந்த பிறகுதான், எங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பு கிடைத்தது. அவர், இன்னொரு பாசமுள்ள அப்பாவானார். அவர் தந்த ஊக்கத்தில், கால்பந்து, கைப்பந்து இரண்டிலுமே திறமையை வளர்த்துக் கொண்டேன். தேசிய அளவில் வாலிபால் வீராங்கனையாக உயர்ந்தேன்.

பட்டமேற்படிப்பை முடித்து சட்டமும் படித்தேன். மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் தலைமைக் காவலர் பதவித் தேர்வுக்கான அழைப்பு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் என் பிறந்த தேதி பிழையாக இருந்தது. அதைத் திருத்தி சரிசெய்ய டெல்லி போக வேண்டும்.

2011-ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 ஆம் தேதி லக்னோவின் சார்பக் ரயில் நிலையம். தனி ஆளாக டெல்லிக்குப் பயணம். ரயில் வண்டியில் பொது வகுப்பு. நிற்க கூட இடம் இல்லை. கழிவறையருகில் ஒடுங்கி அமர்ந்திருந்தேன். பையில், செல்போன், சான்றிதழ்கள், கழுத்தில் தங்கச்சங்கிலி. அந்த ஜன நெரிசலில், நான்கைந்து முரடர்கள், என்னை நெருங்கி வந்து தங்கச் சங்கிலியை பறிக்க முற்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் நானும் அந்த ரவுடிகளும் ரயில் பெட்டியின் கதவு இருக்கும் இடத்திற்கு வந்து விட்டோம். ஒருவன் முழு பலத்துடன் என்னை காலால் உதைத்துத் தள்ள… வெளியே தெறித்து வீழ்ந்தேன். விழுந்த இடம் இன்னொரு ரயில் தடம். கருங்கற்களில் மோதியதால், மயக்கமானேன். அதனால் அடுத்து வந்த ரயில் என் இடது காலைத் துண்டித்துச் சென்றது.

அந்த இரவில் நான் கிடந்த தடத்தில் பத்துப் பதினைந்து வண்டிகள் கடந்து போயிருக்கும். மனித கழிவுகள் என் மேல் வந்து விழுந்தன. வலது காலிலும் பலத்த அடி. என்னால் அசைய முடியவில்லை. விடியும் வரை தடத்திலேயே கிடந்தேன். காலையில் அந்தப்பக்கம் வந்தவர்கள் எனது அலங்கோலத்தைப் பார்த்து பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே மயக்க மருந்து தரக் கூட வசதி இல்லாத அந்த மருத்துவமனையில் இடது காலின் முழங்காலுக்குக் கீழ் உள்ள பகுதியை வெட்டி அகற்றினார்கள். எல்லாம் என் கண் முன் நடந்தது. உபி சட்டமன்ற தேர்தலுக்காகப் பிரசாரம் செய்து கொண்டிருந்த அகிலேஷ் யாதவ் எனக்கு நேர்ந்த துயரத்தை அறிந்து என்னை வந்து பார்த்து, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தார்.

என் நிலை அறிந்த சோனியா காந்தி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானை என்னைப் பார்க்க அனுப்பி வைத்தார். அஜய் என்னை விமான ஆம்புலன்சில் லக்னோவிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எய்ம்ஸில் எனது உடல்நிலையில் பிரமாதமான முன்னேற்றம் உண்டானது. எய்ம்ஸில் எனக்கான செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பிறகு எதையும் பிடிக்காமல் நடக்கும் அளவிற்கு முன்னேறினேன். ஓம் பிரகாஷ் என்னிடம் சொன்னார்:

“”அருணிமா, மாற்றுத்திறனாளி யாரும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதில்லை. அந்தப் பெருமையை அடையும் முதல் பெண்ணாக நீ ஏன் இருக்கக் கூடாது” என்றார்.

மனதில் உறுதி வந்தது. எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பாலை, ஜாம்ஷெட்பூரில் சந்தித்தேன். நிச்சயம் நீ வெல்வாய்.. என்று ஆசிர்வதித்ததுடன் உத்தர்காசியில் செயல்படும் டாடா ஸ்டீல் ஃபவுண்டேஷனில் எனக்கு மலையேற்றப் பயிற்சிக்கு இடம் வாங்கிக் கொடுத்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியின் முதல் இலக்கு ஐஸ்லாண்ட் பீக் என்னும் மலைமுடியை அடைவதுதான். இந்த மலைமுடி கடல் மட்டத்திலிருந்து 20,299 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலை முடியை அடைந்து விட்டால், கிட்டத்தட்ட எவரெஸ்ட் மடியில் கால் வைப்பது போலாகிவிடும்.

கடுங்குளிர் உயிரை உலுக்க… உயிரைக் கையில் பிடித்தபடி நான் மலை ஏற… செயற்கைக் கால் கொண்டு பனிப் பாறைகளில் பாதுகாப்பாகக் கால் ஊன்ற முடியவில்லை. திடீரென்று, செயற்கைக் கால் திசை திரும்பியது. உடல் பாரம் தாங்க முடியாமல் செயற்கைக் காலின் பொருத்தம் விடத் தொடங்கியிருக்க வேண்டும். அடுத்த அடி எடுத்து வைப்பது இமாலய பிரயத்தனமாக அமைந்தது. மனமெல்லாம் எவரெஸ்ட் வியாபித்து இருந்ததால், இடது காலில் ஏற்பட்ட ரத்தக் கசிவு பெரிதாகப் படவில்லை. ஐள்ப்ஹய்க் டங்ஹந் ஏறியாகி விட்டது. இந்த மலைமுடிக்கு வர, நான் பட்ட பாட்டைக் கண்ட என் குழுவினர், “அருணிமா நீ படும் பாட்டைக் கண்டு, நாங்கள் பயத்தால் உறைந்து விட்டோம்… இந்த மலை முடிக்கு வந்த முதல் மாற்றுத் திறனாளி நீதான்… இதுவே சர்வதேச சாதனைதான். இனியும் உயிருடன் விளையாட வேண்டாம்’ என்றார்கள். என்னை இந்த அளவுக்கு உயர்த்திய வளர்ப்பு அப்பா ஓம் பிரகாஷின் லட்சியக் கனவுதான் நான் எவரெஸ்ட் சிகரம் ஏறி தேசியக் கொடியை விரித்து நிற்க வேண்டும் என்பது. அதை நனவாக்காமல் நான் திரும்ப மாட்டேன்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.

மரணப் போராட்டம் நடத்தி கடைசியில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன். தேசியக் கொடியை விரித்துப் பிடித்து புகைப்படம் வீடியோ எடுத்துக் கொண்டேன். அந்த வேளையில் நான் புதிதாய் பிறந்தேன். எனக்கு சென்ற ஆண்டு (2015) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. எனது சுயசரிதையான Born Again on the Mountain என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். தன்னம்பிக்கை குறித்து, வெளிநாடுகளில், இந்தியாவில், சொற்பொழிவு ஆற்றி வருகிறேன். எனது கனவு மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி உருவாக்குவதுதான். அது நனவாக வேண்டும்… உபி முதல்வர் அகிலேஷ் 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். எனது வாழ்க்கையைத் திரைப் படமாக்க பர்ஹான் அக்தர், ரிதேஷ் சித்வானி என்னை அணுகியிருக்காங்க. ஐம்பது லட்சம் தருவதாகக் கூறினார். ஆனா நான் ஐந்து கோடி கேட்டுள்ளேன். எனக்காக அல்ல. மாற்றுத்திறனாளிகளுக்கான அகாடமிக்காக” என்கிறார் கூலாக.

Related Posts

error: Content is protected !!