ஜி.எஸ்.டி. வரி – நான்கு அடுக்காக விதிக்க முடிவு! – அருண் ஜெட்லி விளக்கம் – AanthaiReporter.Com

ஜி.எஸ்.டி. வரி – நான்கு அடுக்காக விதிக்க முடிவு! – அருண் ஜெட்லி விளக்கம்

பொருள்கள், சேவைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உற்பத்தி வரி, விற்பனை வரி, கூடுதல் வரி என பல்வேறு வரிகளை இப்போது விதித்து வருகின்றன. இந்த வரி விகிதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இவற்றுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய மோடி அரசும் மேற்கொண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு-சேவை வரியை 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுத்துள்ளது. இதன்படி அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்சமாகவும், ஆடம்பரப் பொருள்களுக்கும், புகையிலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கும் அதிகபட்சமாகவும் வரி விதிப்பு இருக்கும். ஜிஎஸ்டி வரி அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

gst nov 4

மத்திய நிதியமைச்சர் அருண்  ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நுகர்வோர் விலைக் குறியீட்டை நிர்ணயிக்கும் பொருள்களில் 50 சதவீதப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. இதில் உணவு தானியங்களும் அடங்கும். மக்களால் தினசரி அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பொதுவாக பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள் மீது 12 முதல் 18 சதவீதம் என இரு அடுக்குகளில் வரி விதிக்கப்படும். வரி இழப்பை ஈடு செய்வோம்:

சொகுசு கார்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் என அதிகபட்ச வரியும், சுத்தமான எரிசக்திக்கான கூடுதல் வரியும் விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி மூலம் மாநிலங்களுக்கு முதல் 5 ஆண்டுகளில் ஏற்படும் வரி இழப்பு சரி செய்யப்படும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் வரி விலக்கிக் கொள்ளப்படும். மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்ய ரூ.50,000 கோடி தேவைப்படுகிறது.

ஆடம்பரப் பொருள்களில் இருந்து கிடைக்கும் கூடுதல் வரி வருவாய் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் மீதான வரியை குறைவாக நிர்ணயிக்க முடியும். தங்கத்தின் மீது 4 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு உத்தேசித்துள்லது. எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார் ஜேட்லி.

இதனிடையே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் குறையும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில்” மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களுக்கு இப்போது 6 சதவீத வரி உள்ளது. ஜிஎஸ்டி-யில் இது 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. எனவே, அப்பொருள்களின் விலை குறையும். வெகுசில பொருள்களுக்கு மட்டுமே வரி 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகக் அதிகரிக்கும். அதேநேரத்தில் பல பொருள்களுக்கு வரி தற்போதுள்ள 26 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்துக்கு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே நாட்டின் பணவீக்கம் குறையும் “ என்றார் அவர்.