நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை போடுங்க யுவர் ஆனர்!- அப்போலோ மனு! – AanthaiReporter.Com

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை போடுங்க யுவர் ஆனர்!- அப்போலோ மனு!

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி, அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்தன. அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு, அப்பல்லோ மருத்துவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்த, தடை விதிக்கக் கோரி அப்போலோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களை கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் பிப்ரவரி 11ம் தேதி திங்கள் கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.