சென்னையில் கோலம் போட்ட பெண் பாக்., அமைப்புடன் தொடர்பு! – கமிஷனர் பேட்டி! – AanthaiReporter.Com

சென்னையில் கோலம் போட்ட பெண் பாக்., அமைப்புடன் தொடர்பு! – கமிஷனர் பேட்டி!

மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில், அடுத்தவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்களில் ஒருவர், பாக்., அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் பெண்கள், வீடு களுக்கு முன்பாக நோ சிஏஏ, நோ என்ஆர்சி, நோ என்பிஆர் என்ற வாசகங்கள் அடங்கிய கோலத்தை வரைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் இது போன்ற கோலம் வரைய அனுமதி மறுத்தனர். அதற்குப் பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே ஆறு பேரை கைது செய்து சிறிது நேரத்துக்குப் பின்னர் விடுவித்தனர். அவர்கள் மீது முன் அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து, வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார்.மேலும், கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி என்பவர், பாக்., பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.