இந்தியாவிலேயே ரெண்டாவது பணக்காரக் கட்சி திமுக! – AanthaiReporter.Com

இந்தியாவிலேயே ரெண்டாவது பணக்காரக் கட்சி திமுக!

நம் நாட்டில் பல்வேறுமுக்கிய அரசியல் கட்சிகள் பல நூறு கோடி ரூபாயை நன்கொடை என்ற பெயரில் சம்பாதித்து வைத்துள்ளன. கட்சி நிர்வாகத்தை நடத்தவும், தேர்தல் செலவுகளை எதிர்கொள்ளவும், பெரிய அளவில் நன்கொடை பெறுவது அவசியமானதாகும் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் திரட்டும் நன்கொடையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனாலும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு, 1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகையை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்தி, பல நூறு கோடி ரூபாய்க்கு வரி கட்டாமல் உள்ளன. இந்நிலையில் நாட்டிலேயே பணக்கார மாநிலக்கட்சியாக சமாஜ்வாதி கட்சி இருப்பதாகவும், திமுக இரண்டாவது இடத்திலும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 3-வது இடத்திலும் உள்ளது.

2017-2018 ஆம் நிதியாண்டில் நாட்டில் உள்ள 37 மாநிலக்கட்சிகளின் வரவு செலவு அடிப்படையில் ஜனநாயக சீர் திருத்த அமைப்பு சார்பில் (Association for Democratic Reforms) ஆய்வு நடத்தப்பட்டது. இந்த 37 கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 237.27 கோடி என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது. நாட்டிலேயே அதிக வருமானம் கொண்ட கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது. அக்கட்சியின் வருவாய் ரூ. 47.19 கோடி, இது 37 கட்சிகளின் மொத்த வருவாயில் 19.89% ஆகும். இரண்டாம் இடம் பிடித்துள்ள திமுகவின் வருமானம் ரூ. 35.748 கோடியாகும். தெலங் கானா ராஷ்டிரிய சமிதியின் வருமானம் ரூ. 27.27 கோடியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் உள்ளது.

அதே நேரத்தில் மற்ற 34 மாநிலக் கட்சிகளின் ஆண்டு வருமானம் குறைவு :

நிதியாண்டு கட்சிகளின் வருமானம்
2016-2017 ரூ. 409.64 கோடி
2017-2018 ரூ.236.86 கோடி

இதன்மூலம் சுமார் 42% மாநிலக்கட்சிகளின் வருமானம் குறைந்துள்ளது.

மொத்தமுள்ள 48 மாநிலக்கட்சிகளில் 37 கட்சிகளின் தணிக்கை அறிக்கையை வைத்து தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 11 கட்சிகளின் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது அந்த அமைப்பு. கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகள், பங்களிப்புகள், உறுப்பினர் சேர்க்கை கட்டணம் உள்ளிட்ட நடவடிக்கை மூலம் பொதுவாக வருமானம் கிடைக்கிறது.

2017-18 நிதியாண்டுக்கான 37 கட்சிகளின் மொத்த செலவு ரூ. 170.45 கோடியாக உள்ளது. சமாஜ்வாதிக் கட்சி ரூ. 34.539 கோடி செலவு செய்ததாகவும், திமுக 27.47 கோடியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ. 16.73 செலவு செய்ததாகவும் ஆய்வறிக்கை தகவல் தெரிவிக்கிறது. சமாஜ்வாதி, திமுக, டிஆர்.எஸ், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய 5 கட்சிகள் தங்கள் செலவுகளை விட அதிக வருமானத்தை கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.