அமேசான் கிண்டில்; தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் இ – புத்தகங்கள் வந்தாச்சு!

அமேசான் கிண்டில்; தமிழ்  உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் இ – புத்தகங்கள் வந்தாச்சு!

தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இனி இ புத்தகங்களை வாசிக்க முடியும் என அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கான புத்தகங்களை தனது கிண்டில் ஸ்டோரில் இணைத்திருப்பதாக கூறியுள்ளது. அதிகம் விற்பனையாகும், பல்வேறு கதையம்சம் கொண்ட புத்தகங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

amezon dec 2

இது குறித்து கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி தன் ஃபேஸ்புக் பக்கத்தில், “நண்பர்களே, நற்செய்தி. அமேசான் கிண்டில் மூலமாக தமிழ்ப் புத்தகங்கள் மின்வடிவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. கிழக்கு பதிப்பகம் (கூடவே வரம், நலம், தவம், ப்ராடிஜி) புத்தகங்கள் சுமார் 320 தற்போதைக்கு இந்த முறையில் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் முக்கியமான செய்தி… கிண்டில் அன்லிமிடெட் சேவை உங்களிடம் இருந்தால்!

இந்த ஆண்டுக்கு முன்வரை (அதாவது சென்ற ஆண்டு வரை) நாங்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களை “விலை இன்றி” நீங்கள் படிக்கலாம். (எழுத்தாளர்கள் பதறவேண்டாம்; உங்களுக்கான ராயல்டியில் மாற்றம் இருக்காது.) மேலும் மின்புத்தக விலைகளே அச்சுப் புத்தக விலைகளைவிடக் குறைவானவை.வரும் நாட்களில் கிண்டில் வாயிலாக பெருமளவில் நூல்களை வெளியிட உள்ளோம். ” என்று தெரிவித்துள்ளார்

இந்த கிண்டில் டேப்லெட் வகைகளோடு இல்லாமல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் கிண்டில் ஆப்ஸ்களையும் மேம்படுத்தி இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதனால் கிண்டில் ஆப் பயனர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்திய மொழிகளில் பல்வேறு புத்தகங்களை வாசிக்க முடியும். அமேசானின் போட்டி நிறுவனமான கூகுள் பிளே புக்ஸ் சேவையும் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்களை வழங்கி வருகிறது.

‘ஐந்து இந்திய மொழியில் புத்தகங்களை வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளோம். புதிய சேவைகளைப் பெற பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் கருவி அல்லது கிண்டில் ரீடர் இருந்தாலே போதுமானது. இந்திய வாசகர்களுக்கு அதிக தேர்வு முறைகளை வழங்குவதன் ஒரு அங்கமாக ஐந்து மொழிகளை கூடுதலாக இணைத்திருக்கிறோம்,’ என கிண்டில் இந்தியா மேலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!