அமேசானின் ஆளில்லா சூப்பர் மார்கெட்! – AanthaiReporter.Com

அமேசானின் ஆளில்லா சூப்பர் மார்கெட்!

அமேசான் இந்தியா ஆன்லைன் வர்த்தகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 சதவிகிதம் அதிக விற்பனையாளர்களைக் கொண்டுள்ளார்கள். தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இவர்களது தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் மூன்றாம் மற்றும் நான்காம் தர நகரங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள், ஸ்மார்ட்போன் மூலம் தங்களின் பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்குப் பயன்பாட்டிற்கு மிகவும் எளிதாக அமேசான் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி மற்றும் அதிகமாகப் பார்வையிடப்பட்ட வலைத்தளம் என்ற பெருமைகள் அமேசானையே சேரும். இந்தியாவில் 1.3 கோடி கன அடி பரப்பளவு கொண்ட சேமிப்புக் கிடங்கைக் கொண்டுள்ளனர் கடந்த ஐந்து மாதங்களாகச் சராசரியாக வாரத்திற்கு 3000 விற்பனையாளர்கள் என இதுவரை மொத்தம் 2,70,000 விற்பனையாளர் களைக் கொண்டுள்ள இந்நிறுவனம் இனிவரும் ஆண்டுகளில் மொபைல் மற்றும் வலைத்தளங்களை மேம்படுத்தப் பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள விருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. ஆம்.. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.

அமேசான் கோ என்ற இந்த சூப்பர்மார்க்கெட்டின் சோதனை ஓட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்துகொள்ளும். வாங்கிய பொருட்களுக்கான பில் விலை, வாடிக்கையாளர் கடையை விட்டுப் போகும்போது அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட க்யூவில் நிற்க வேண்டியதில்லை.

ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் அமேசான் கோ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருள் என்ன என்பதை அடையாளம் கண்டு அதை பட்டியலில் சேர்க்கும். பொருளை திரும்ப வைத்துவிட்டால் பட்டியலிலிருந்தும் அந்தப் பெயர் நீங்கும். இந்த தொழில்நுட்பத்திற்கு அமேசான் just walk out என பெயரிட்டுள்ளனர். ஐந்து வருடமாக உருவாக்கிய இந்த தொழில்நுட்பத்தை குறித்து அமேசான் நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி இந்த அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுக்காக சோதனை அடிப்படையில் திறக்கப்பட்டாலும் விரைவில் பொதுமக்களுக்கும் இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காணுவதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. மேலும் கேசியரே இல்லாத சூப்பர் மார்க்கெட் என்றாலும் வாடிக்கையாளர்களை வரவேற்க , மதுபானங்கள் பிரிவில் வாடிக்கையாளரின் ஐ.டி.யை சரிபார்க்க என ஆறு ஊழியர்கள் உள்ளனர். இந்த தொழில்நுட்பம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பல அமேசான் கோ சூப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என அமேசான் கோ தொழிநுட்பத்தின் தலைவரான திலீப் குமார் தெரிவித்துள்ளார்.