ஒரு லிட்டர் பாட்டில் காற்றின் விலை 11 ஆயிரம் மட்டுமே!

ஒரு லிட்டர் பாட்டில் காற்றின் விலை 11 ஆயிரம் மட்டுமே!

பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என உலகமே தற்போது குப்பையாக மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபாட்டால் மனிதர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருக்கிறது என்ற புள்ளிவிபரங்கள் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா என காற்று மாசுபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் ஏராளம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதுவும் பெரிதாக வெற்றி அடைவதில்லை. அரை கிலோமீட்டர் தொலைவுக்கே வண்டியை எடுத்துச் செல்லும் நாம் எப்படி மாசுபாட்டை குறைக்கப்போகிறோம். சீனா மற்றும் இந்தியாதான் அதிக அளவு மாசுபாடு உடைய நாடாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. மேலும் சீனாவில் காற்றில் இருக்கும் மாசின் அளவு, பாதுகாப்பான வரம்பைக் காட்டிலும் 20 மடங்கு அதிகம். இதனால் ஆண்டுக்கு 3.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான மக்கள் உயிரிழக்கின்றனர். சீனா தலைநகரான பெய்ஜிங் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 21 சிகெரட்டை பிடிப்பதற்கு சமம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு மாசுள்ளதாக காற்று இருக்கிறது.

air mar 5

இந்நிலையில் சுவாசிக்கும் காற்றை பாட்டிலில் அடைத்து, இப்போது விற்கத் தொடங்கிவிட்டார்கள். தண்ணீர் பாட்டில்போல இது காற்று பாட்டில். சீனாவில் தொடங்கியிருக்கும் இந்த வியாபாரம், படிப்படியாக உலகம் எங்கும் பரவிவருகிறது. சீனாவில் இப்போது சக்கைப்போடு போடும் இந்த நிறுவனம், 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் சி.இ.ஓ-க்களில் ஒருவரான மோசஸ் லாம், ‘`உண்மையில் இதை ஒரு விளையாட்டான யோசனையாகவே நாங்கள் பேசினோம். ஒரு பையில் காற்றை அடைத்து, புகைப்படம் எடுத்து Ebay தளத்தில் விற்பனைக்கு ஏற்றினோம். உடனே விற்றது. அடுத்த பையை அதைவிட கூடுதல் விலை வைத்து வெளியிட்டோம். அதுவும் விற்றது. அப்போதுதான் இதில் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உணர்ந்தோம். அப்போதும்கூட, மருத்துவரீதியில் தேவைப்படுவோருக்கும், தங்கள் சொந்த ஊரின் காற்றை சுவாசிக்க விரும்புவோருக்கும் இது பயன்படும் என்ற அளவில்தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம். ஆனால், சீனாவில் எங்கள் காற்று பாட்டிலுக்கு அன்றாடத் தேவை இருப்பதைக் கண்டு கொண்டோம். இப்போது எங்கள் நிறுவனம் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப்களில் ஒன்று’’ என்கிறார்.

அதே சமயம் உலகிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க காற்று சுவிட்சர்லாந்திலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆல்ப்ஸ் மலைக்கு வந்து தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாதவர்களுக்காக, பாட்டிலில் காற்றை அடைத்து விற்பனை செய்து வருவதாகச் சொல்கிறது ஒரு நிறுவனம். இது குறித்து, “ஆல்ப்ஸ் மலையில் ரகசியமான இடத்திலிருந்து சுத்தமான காற்றைப் பிடிக்கிறோம். தரமான பாட்டிலில் அடைத்து, உலகம் முழுவதும் விற்பனை செய்கிறோம். ஒரு லிட்டர் காற்றின் விலை 11 ஆயிரம் ரூபாய். எல்லோராலும் அந்த விலைக்கு வாங்க முடியாது என்பதால் அரை லிட்டர் காற்றை 6,475 ரூபாய்க்கு கொடுக்கிறோம். 3 லிட்டர் காற்றை வாங்குபவர்களுக்கு விலையைக் குறைத்து, 16,500 ரூபாய்க்கு அளிக்கிறோம்.

இந்தப் பாட்டில் கைக்கு வந்தவுடன் சுவாசிப்பதைவிட, சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சுவாசித்தால் ஆல்ப்ஸ் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைக்கும். இதில் 25% வருமானம் ஆப்பிரிக்காவின் சுத்தமான குடிநீர் திட்டத்துக்குச் செல்கிறது. விற்பனை மெதுவாக ஆரம்பித்தாலும் விரைவில் வேகம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது?” என்கிறார்கள்

error: Content is protected !!