அலோக் வர்மா ஐ.பி.எஸ். பதவியிலிருந்து ராஜினாமா! – AanthaiReporter.Com

அலோக் வர்மா ஐ.பி.எஸ். பதவியிலிருந்து ராஜினாமா!

சுப்ரீம் கோர்ட்டால் சிபிஐ இயக்குனர் பதவி அமர வைக்கப்பட்டு பிரதமர் மோடியால் அதிரடியாக நீக்கப்பட்ட அலோக் வர்மா ஐ பி எஸ், புதிதாக இட மாறுதல் செய்யப்பட்ட தீயணைப்பு சேவை டைரக்டர் ஜெனரல் பதவியில் சேர மறுத்து விட்டார். மேலும் வரும் 31 வரை தொடர இருந்த தனது ஐபிஎஸ் பதவியையும் அலோக் வர்மா இன்று ராஜினாமா செய்து விட்டார்.

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த தேர்வுக்குழு கூட்டத்தின் முடிவில் அலோக் வர்மாவை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டது. ஜனவரி 31ம் தேதி சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டது.அதே தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அக் கூட்டத்தின் முடிவில் அலோக் வர்மா தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்துறை காவலர்கள் துறையின் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். கூடுதல் சிபிஐ இயக்குனர் நாகேஷ்வராவ் சிபிஐ பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு 9 மணிக்கு சிபிஐ இயக்குனராக அவர் பொறுப்பேற்றார்.

அதே சமயம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அலோக் வர்மா கடும் கண்டனம் தெரிவித்தார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அலோக் வர்மா ‘‘போலியான, ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் என்னை மத்திய அரசு பதவி நீக்கியது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. என் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் ராகேஷ் ஆஸ்தானாவால் ஜோடிக்கப்பட்டவை’’ என குற்றம்சாட்டினார்.

மேலும்மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த அலோக் வர்மா தனக்கு அளிக்கப்பட்ட தீயணைப்பு துறையின் டைரக்டர் ஜெனரல் பதவி ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார். சுய பரிசோதனைக்கு பின் இந்த முடிவை எடுத்ததாக அலோக் வர்மா தன் ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார்.

‘‘விதி முறைகளின் படி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 31ம் தேதியே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். சிபிஐ இயக்குனர் பதவி என்பது குறிப்பிட்ட காலத்துக்குட்பட்டது என்பதால் அந்த பதவியில் தொடர்ந்து நீடித்தேன். தற்போது சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதாலும் தீயணைப்பு துறை டைரக்டர் ஜெனரல் பதவிக்கான வயதை நான் ஏற்கெனவே கடந்து விட்டதாலும் எனது ராஜினாமாவை இன்று சமர்ப்பிக்கிறேன். எனது ராஜினாமா இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது’’ என்றும் தன் கடிதத்தில் அலோக் வர்மா தெரிவித்துள்ளார்.