சிபிஐ இயக்குநர் விவகாரம் ; அலோக் வர்மா அலெக் – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

சிபிஐ இயக்குநர் விவகாரம் ; அலோக் வர்மா அலெக் – சுப்ரீம் கோர்ட் ஆர்டர்!

நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான  சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது செல்லாது எனவும் அவரே சிபிஐ இயக்குநராக தொடர்வார் எனவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2017 -ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பொறுப்பேற்ற போது, இரண்டாம் இடத்தில் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதையொட்டிய விவகாரத்தில் ராகேஷ் அஸ்தானா மீது, ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிபிஐ  இயக்குநராக இருந்த அலோக் வர்மா மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இரு அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. அதில், சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா தொடர்வார் எனவும், அதேசமயம் அதிகார சர்ச்சை தொடர்பான புகார் நிலுவையில் இருப்பதால் அவர் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலோக் வர்மா மீதான புகாரை பிரதமர் மோடி தலைமையிலான விசாரணை குழு விசாரித்து முடிவெடுக்கும் வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.ஐ. இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அலோக் வர்மா விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ரபேல் விவகாரத்தில் இருந்து இனி யாரும் ஓடிப்போக முடியாது என்றும், அனில் அம்பானிக்கு 30000 கோடி ரூபாய் கொடுத்தது விசாரணையில் தெரியவரும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!