ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கும் மாரியப்பன் (தங்கவேலுவின்) வாழ்க்கை கதை!

ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கும் மாரியப்பன் (தங்கவேலுவின்) வாழ்க்கை கதை!

மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ‘மாரியப்பன்’ என்ற பெயரின் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.

iswarya jan 1

யார் இந்த மாரியப்பன் தங்கவேல்:

இவர் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

தன்னைக் குறித்து மாரியப்பன் அளித்திருந்த  ஒரு பேட்டியில், “‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்றார் தங்கவேலு.

தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா  ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலு கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினர். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியிருந்தார்.

சொன்னபடி.. 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.

இந்த மாரியப்பன் தங்கவேலுவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐஸ்வர்யா தனுஷ் படமொன்றை உருவாக்க இருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழில் இப்படம் உருவாகவுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

மாரியப்பன் வேடத்தில் நடிப்பதுக்கான சரியான ஆளைத் தற்போது படக்குழு தேர்வு செய்து வருகிறது. ஆனால், படத்தின் போஸ்டருக்காக மாரியப்பன் தங்கவேலுவை வைத்தே போட்டோ ஷூட் நடத்தி போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு. ‘மாரியப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு வசனம் எழுத ஒப்பந்தமாகியுள்ளார் ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜூமுருகன். யாருமே எதிர்பாராத வண்ணம், இப்படத்தின் போஸ்டரை புத்தாண்டு சிறப்பாக ஷாருக்கான் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

சமூக வலைதளத்தில் இருக்கும் பல்வேறு திரையுலகினரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

டெயில் பீஸ்:

இதனிடையே ஒரு பேட்டியின் போது  தன்னை மாரியப்பன் தங்கவேலு என்று எழுதாதீர்கள், மாரியப்பன் என்றே எழுதுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். காரணம் தனது தந்தையான தங்கவேலு, தனது குடும்பத்தை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டதாகவும் அவருக்கும் தன் குடும்பத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.அத்துடன் தங்கம் வென்றததும் அரசு அறிவித்த இரண்டு கோடி பரிசை ‘எங்களது வங்கியில்தான் டெப்பாசிட் செய்ய வேண்டும்’ என்று சில வங்கி அதிகாரிகளும் திடீரென என் குடும்பத்தைத் தேடி பல சொந்த பந்தங்கள் வருவதாகவும், இது போன்ற திடீர் உறவுகளும் கவனிப்புகளும் என்னை பயம்கொள்ள வைக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.தனக்கு தக்க பயிற்சி அளித்து தன் குடும்பத்துக்கு மாதாமாதம் 10,000 வழங்கி வந்த தன் பயிற்சியாளருக்கே எல்லா புகழும் சேரும் என்றும் குறிப்பிட்டிருந்தாராக்கும்.

error: Content is protected !!