அதிமுக சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 155 சதவீத வளர்ச்சி! – AanthaiReporter.Com

அதிமுக சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 155 சதவீத வளர்ச்சி!

இந்தியாவில் அதிக சொத்துகள் வைத்துள்ள மாநில கட்சிகளின் பட்டியலில் ரூ.224.87 கோடி சொத்து மதிப்புடன்  வளர்ச்சியில் இரண்டாம் இடத்தை அதிமுக பிடித்துள்ளது. 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கட்சியின் சொத்து மதிப்பு 155 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில கட்சிகள் தங்களது சொத்து கணக்கு, வரவு, செலவு உள்ளிட்டவைகளை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்பிக்க வேண்டும்.
அதன்படி, நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகள் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளன. அதில், தங்களது சொத்து விவரங்கள், வங்கி மற்றும் இதர முதலீடுகள், இதர  வருவாய் ஆதாரங்கள் உள்ளிட்டவைகளை கட்சிகள் சமர்பித்துள்ளன.
அதனடிப்படையில், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011-12-ஆம் நிதியாண்டில் பெரும்பாலான மாநில கட்சிகள் தங்களது அதிகப்படியான சொத்து வருமானமாக டெபாசிட் தொகையை காண்பித்துள்ளனர். இந்த நிதியாண்டில் இக்கட்சிகளுக்கு ரூ.331.54 கோடி வருவாய் டெபாசிட்டுகள் மூலம் கிடைத்துள்ளது. இந்த டெபாசிட் தொகை 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.1054.80 கொடியாக உயர்ந்துள்ளது. 2011-12-ஆம் நிதியாண்டில் ரூ.24.11 கோடியாக இருந்த இக்கட்சிகள் அறிவித்துள்ள சராசரி சொத்து மதிப்பு, 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.65.77 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக, 2011-12-ஆம் நிதியாண்டில் ரூ.212.86 கோடியாக இருந்த உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சியின் சொத்து மதிப்பு 198 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ.634.96 கோடியாக உயர்ந்துள்ளது. அதிக சொத்துக்களுடன் இக்கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. சொத்து வளர்ச்சியில் இரண்டாம் இடத்ததை பிடித்துள்ள தமிழகத்தின் அதிமுக கட்சியின் சொத்து மதிப்பு 2011-12-ஆம் நிதியாண்டில் ரூ.88.21 கோடியாக இருந்தது. இது 155 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.224.87 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் சிவசேனா கட்சியின் சொத்து மதிப்பு இந்த காலகட்டத்தில் ரூ.20.59 கோடியில் இருந்து ரூ.39.568 கோடியாக உயர்ந்துள்ளது. இது 92 சதவீத வளர்ச்சியாகும்.
2012-13-ஆம்  ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்த சராசரி சொத்து மதிப்பு ரூ.1.165 கோடியாகும். இவ்விரு கட்சிகளின் சராசரி சொத்து மதிப்பு 2015-16ஆம் ஆண்டில் ரூ.3.765 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், அதிமுக, சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கட்சிகள் வாங்கியுள்ள கடன் குறித்த விவரங்களும் அந்த அறிககியில் இடம் பெற்றுள்ளன. 2011-12-ஆம் நிதியாண்டில் ரூ.47.475 கோடியாக இருந்த இந்த தொகை 2015-16-ஆம் நிதியாண்டில் ரூ.52.21 கோடியாக அதிகரித்துள்ளது.