ரபேல் டீலிங் : பிரான்சில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 1123 கோரி வரிச் சலுகை! – AanthaiReporter.Com

ரபேல் டீலிங் : பிரான்சில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 1123 கோரி வரிச் சலுகை!

தேர்தல் பரப்புரைக்கு முன்னரே நாட்டில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்திய ரபேல் ஒப்பந்தத்துக்குப் பின், பிரான்சில் செயல்படும் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1123 கோடி வரி தள்ளுபடி அளித்ததாக பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது பிரான்சில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகைதான் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கூறியுள்ளது.

நம் நாட்டின் தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம், பிரான்ஸ் நாட்டில் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ என்ற பெயரில் செயல்படுகிறது. இந்நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள் நெட்வொர்க் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிரான்சில் உள்ளன. இந்நிறுவனம் கடந்த 2007 முதல் 2010ம் ஆண்டு வரை பிரான்ஸ் அரசுக்கு 60 மில்லியன் யூரோ வரிபாக்கி வைத்திருந்தது. 2010-2012ம் ஆண்டு காலத்துக்கு கூடுதலாக 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என பிரான்ஸ் கூறியது. 2015ம் ஆண்டு ஏப்ரல் வரை பிரான்ஸ் அரசுக்கு அனில் அம்பானி நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த வரிபாக்கி 151 மில்லியன் யூரோவாக (ரூ.1180 கோடி) இருந்தது. இந்நிலையில்தான், பிரான்ஸ் அரசிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை பிரதமர் மோடி இறுதி செய்தார்.

இதில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் இந்திய பங்குதாரர் நிறுவனமாக சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த 6 மாதத்துக்குப்பின், பிரான்சில் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி பாக்கி வழக்கு முடிவுக்கு வந்தது. வெறும் 7.3 மில்லியன் (ரூ.57 கோடி) வரியை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டு 143.7 மில்லியன் யூரோ(ரூ.1123 கோடி) தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குதாரராக சேர்க்கப் பட்டதால்தான் இந்த வரிச்சலுகை ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாக பிரான்ஸ் பத்திரிக்கை ‘லீ மாண்டே’ கூறியுள்ளது.

ஆனால், இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ‘‘பிரான்ஸ் அரசு விதித்த வரி சட்ட விரோதமானது. எங்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. பிரான்சில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் சட்டரீதியாக வரிப்பிரச்னை வழக்கை தீர்த்துக் கொள்வதுபோல் எங்கள் வரிப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது’’ என்றார். மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த செய்தி வெளியாகியிருப்பது பா.ஜ.வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.