இலவச உணவு வங்கியில் குவியும் அமெரிக்க அரசு ஊழியர்கள்! – AanthaiReporter.Com

இலவச உணவு வங்கியில் குவியும் அமெரிக்க அரசு ஊழியர்கள்!

அதிபர் ட்ரம்பின் அடாவடி போக்கால் அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கி போனதால் சம்பள மின்றி தவிக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் அன்றாட உணவு செலவை குறைக்க தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் இலவச உணவு வங்கியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் தேர்தல் வாக்குறுதிப்படி மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் கட்டுவதில் பிடிவாதமாக உள்ளார். அதற்காக அவர் கேட்ட நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் மறுத்துவிட்டனர். அதன் காரணமாக கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியது. அதன் காரணமாக லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் வேலையின்றி, சம்பளமின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. போக்குவரத்துத்துறை, காவல்துறை போன்ற அத்தியாவசிய பணிகளில் ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் இதற்கு முன் பலமுறை அரசு நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை நாட்களுக்கு நீடிப்பது இதுவே முதல்முறையாகும். சம்பளமில்லாத காரணத்தால் அரசு ஊழியர்கள் தங்கள் அன்றாட செலவுக்கு போதிய பணமின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுவரை உணவு வங்கியின் தேவையே இல்லாத ஊழியர்கள் பலர் தற்போது முதல்முறையாக வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை இலவசமாக வாங்கிச் செல்கிறார்கள். பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நிதி சேகரித்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்து வருகின்றன.

நியூயார்க் நகரின் பிரபல பார்கிலே சென்டரில் பல சமூக தொண்டர்கள் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்கள். சில கார்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் நியூயார்க் நகரின் உணவு வங்கி அரசு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது.

இதன் மூலம் உணவுச் செலவை சிறிது கட்டுப்படுத்தி மற்ற அன்றாட செலவுகளுக்கு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். விரைவில் அரசு மீண்டும் செயல் படும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கெனவே அதிகரிக்கும் வீட்டு வாடகை பிரச்சனை பலரை பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளிக்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த அரசு நிர்வாக முடக்கத்தால் மேலும் பலர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நியூயார்க் உணவு வங்கி மேம்பாட்டு தலைவர் பிரான்சிஸ்கோ தெசென் செய்தியாளர்களிடம் கூறினார்.

அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்து நீடித்தால் பிப்ரவரி மாதத்தில் ஊழியர்களின் நிலை மேலும் மோசமாகும். வாகனத்துக்கு பெட்ரோல் போட கூட பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதனால் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் உள்ளவர்களாலும் பணிக்கு செல்லமுடியாத நிலை உருவாகும் என கூறப்படுகிறது. எனவே ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாக முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.