சவுதி-யில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக இருந்த தமிழர் நாடு திரும்புகிறார்! – AanthaiReporter.Com

சவுதி-யில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக இருந்த தமிழர் நாடு திரும்புகிறார்!

சவுதி பாலைவனத்தில் 24 ஆண்டுகள் சட்டவிரோதமாக தமிழர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்ட சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக 24 ஆண்டுகள் தமிழர் ஒருவர் வாழ்ந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞான பிரகாசம் ராஜமரியான். 1994 ஆகஸ்ட் மாதம் பிழைப்புத் தேடி சவுதி அரேபியாவுக்கு சென்றார். பின்னர் அடுத்தடுத்து சில மாதங்களில் வேறு 2 பேரிடம் வேலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஒருகட்டத்தில் தன்னை வேலைக்கு வைத்திருப்பவர் யார் என்பதை அவரால் உறுதி செய்ய முடியவில்லை. சம்பளமும் கிடைக்கவில்லை. இதனால் நாடு திரும்ப முடியாமல் பாலைவனங் களிலேயே 23 ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்துள்ளார். இதுகுறித்து ராஜமரியான் கூறும்போது, ‘‘எனது நான்கு மகள்களும் சிறுவயதில் இருந்த நிலையில் நான் வேலை தேடி சவுதிக்கு வந்தேன். தற்போது அதே வயதில் எனக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் தாய்நாடு திரும்பப் போகிறேன். சவுதியில் சம்பாதித்த பணத்தை கொண்டு நான்கு மகள்களில் 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன்’’ என்கிறார்.

கடைசியாக கடந்த 2015-ல் மனைவி இறப்பதற்கு முன் தொலைபேசி மூலம் அவருடன் பேசியுள்ளார். சட்டவிரோதமாக தங்கி இருந்ததால் மனைவியின் மரணத்துக்கு கூட அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

அவரது இந்த நிலையை அறிந்த சமூக சேவகர் சர்புதின் தாயில், சவுதி அரசு அறிவித்த 90 நாள் பொதுமன்னிப்பை பயன் படுத்தி ராஜமரியானைச் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். இதனால் ராஜ மரியான் விரைவில் தாய்நாடு திரும்பவுள்ளார்.

இதனிடையே ஞான பிரகாசம் குறித்து தமிழக அரசோ, மத்திய வெளியுறவு அமைச்சகமோ எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சவுதி அரேபியாவில் விசா முடிந்து ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சவுதி அரசின் இந்த சலுகையை பயன்படுத்தி தாய்நாடு திரும்ப ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். அதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் 11,390 பேர். இதே போல் தமிழகம் (2,022), தெலங்கானா (2,733), மேற்குவங்கம் (2,332), கேரளா (1,736), பிஹார் (1,491), ஆந்திரா (1,120) மற்றும் ராஜஸ் தான் (853) மாநிலத்தைச் சேர்ந்த வர்களும் விண்ணப்பித்துள்ளனராம்.