ஜெ. பாணியில் போராட்டம் தொடரும்! – அதிமுக முதல் + துணை முதல் அமைச்சர் பேச்சு – AanthaiReporter.Com

ஜெ. பாணியில் போராட்டம் தொடரும்! – அதிமுக முதல் + துணை முதல் அமைச்சர் பேச்சு

சுப்ரீம் கோர்ட் ஸ்கீம் என்ற பெயரில் ரீல் சுற்றி அனுப்பியிருக்கும் நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதம் மாலை 5-30 மணிக்கு நிறைவடைந்தது. உண்ணாவிரதம் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் பழரசம் வழங்கி முடித்து வைத்தார்,

போராட்டத்தின் இறுதியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி பிரச்னையில் அதிமுக மத்திய பாஜக அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் தந்தது என்பது மக்களுக்கு தெரியும். காவிரி மேலாண்மை வாரியம் , நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும் என்பதே அரசின் கோரிக்கை.அதிலிருந்து நாம் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்போவதில்லை” என தெரிவித்தார். மேலும், “காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தபோதே திமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கலாம்; காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறுவோம் என திமுக கூறியிருந்தால் வாரியம் அமைக்கப்பட்டிருக்கும்” என திமுகவையும் விளாசித்தள்ளினார் முதல்வ

அதே நிகழ்வில் நிறைவுரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, “காவிரி பிரச்னையை எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்திற்காக தவறான கருத்துக்களை கூறி மக்களை திசை திருப்புகின்றனர். இது பற்றி பேசுவதற்கு தி.மு.க மற்றும் காங்கிரசாருக்கு தார்மீக உரிமை இல்லை. தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த தண்ணீர் தாவா பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதை மக்கள் அறிவார்கள். நடுவர் மன்றம் அமைப்பதற்கும் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை தான் காரணம் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பை வழங்கியது. அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடுவதற்கு அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வலியுறுத்தி வள்ளூவர் கோட்டம் அருகே ஜெயலலிதா ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். இதன் பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதா டெல்லி சென்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டும் என்றும் மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அதை ஏற்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2013-ம் ஆண்டு அரசிதழில் இடம் பெற செய்தார். இதையெல்லாம் மறைத்து விட்டு அரசியல் ஆதாயம் பெற தி.மு.க முயற்சி செய்கிறது. அவர்கள் செய்தது ராஜ துரோகம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். உச்சநீதிமன்ற கெடுவரையிலும் பொறுமையாக இருப்போம். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்கள் அதை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை என்றும் விட்டு தராதவர் ஜெயலலிதா இப்போது நடைபெறுவது அவருடைய ஆட்சி தான், எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா காட்டிய லட்சிய பாதை நாம் நடை போட்டு வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் ஒழுங்காற்று குழு அமைக்கும்வரையிலும் அறவழிப்போராட்டம் தொடரும்” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.