இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி!

இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல்! – கார்த்தி பேட்டி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கைதி’. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். பல தரப்பிலும் பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்து கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி உரையாடிய போது பகிர்ந்த தகவல் தொகுப்பு:

”எனது முதல் படம் ’பருத்திவீரன்’ முடிய 2 வருடங்கள் ஆனது. அடுத்த படம் ’ஆயிரத்தில் ஒருவன்’ முடிய 3 வருடங்கள் ஆனது. படங்கள் எடுக்க இவ்வளவு தாமதம்தான் ஆகும் போல என்று நினைத்திருந்தேன். 2014-ல் ’மெட்ராஸ்’ படத்தில் நடிக்கும் போதுதான் 50 நாட்களிலும் படங்களை முடிக்கலாம் என்று புரிந்தது.

’கைதி’ படத்துக்காக 36 இரவுகள் படப்பிடிப்பு நடந்தது. மிகக் கடுமையாக இருந்தது. நினைத்துப் பாருங்கள், காலை 3 மணிக்கு எழுந்து சண்டைக் காட்சிகளில் நடிக்க உடல் தயாராக இருக்க வேண்டும். கடும் குளிர் வேறு இருந்தது. ’கைதி’ படத்தின் திரைக்கதை இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்யும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். இது ஒரு பயணம் பற்றிய படம்.

சில மாதங்களுக்கு முன் புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல இருக்கும் என்று தோன்றியது. பல கதாபாத்திரங்கள், பல மாஸ் காட்சிகள் என்று ஒரு கதைக்குள் பல விஷயங்கள் இருக்கிறது. அதில் காவல் துறை அதிகாரி பாத்திரத்தில் நரேனை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று லோகேஷ் கூறியதும், நான் நரேனிடம் பேசினேன். அவருடன் சம்மதம் தெரிவித்தார். நண்பருடன் சேர்ந்து திரைப்படத்திற்கு செல்லலாம். ஆனால், நண்பருடன் இணைந்து திரைப்படம் எடுப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். நாங்கள் இருவரும் எப்போதும் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருப்போம். அதில் என்னென்ன வித்தியாசங்களைக் கொண்டு வருவது என்பது பற்றி பேசும் போது பிடித்தது, பிடிக்காதது என்று இருவரின் எண்ணங்களும் ஒன்றாகவே இருக்கும். இருவரும் இணைந்து ஒரு படம் நடிப்போம் என்று இதுவரை கற்பனைகூட செய்ததில்லை. இயக்குநர் லோகேஷ் மூலம் தான் சாத்தியமானது. இப்படத்தை பார்க்கும்போது இதன் இரண்டாம் பாகமாக ‘கைதி 2’ எடுக்க வேண்டுமென்ற ஆவல் வருகிறது.

இந்த படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது டெல்லி என்கிற என்னுடைய கதாபாத்திரம் தான். 10 வருட வாழ்க்கையை சிறைவாசம் இருந்து விட்டு வெளியே வந்த கதாபாத்திரம். சிறையில் இருக்கும் போது அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தையை அவன் பார்த்ததே இல்லை. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அவன் குழந்தையை பார்க்க நினைக்கும்போது ஏராளமான தடைகள் வருகின்றது. 4 மணி நேரத்திற்குள் அவன் பார்த்தாக வேண்டும். ஆனால், பார்க்கக் கூடிய வாய்ப்பு குறைந்து கொண்டே வரும். அதிலிருக்கும் த்ரில், இரவு நேர சாலை பயணத்தில் அடுத்த என்ன ஆபத்து வரும் என்று தெரியாது. படம் ஆரம்பித்து 20 நிமிடங்களிலேயே இறுதிக் கட்டம் ஆரம்பித்து விடும். அதிலிருந்து முடிவு வரை இறுதிக்கட்டம் தான். சண்டை, நடிப்பு இரண்டுமே இருக்கும்.

நானும் ஒரு பெண் குழந்தைக்கு அப்பா என்பதால் இந்த கதைபாத்திரத்துடன் என்னை சுலபமாக தொடர்பு கொள்ள முடிந்தது. அதேபோல, பொழுதுபோக்கான படமும் கூட. டப்பிங் பேசும்போது இசை, ஒளிப்பதிவு, காட்சிகள், என்னுடைய நடிப்பு எல்லாமே புதுமையாக நன்றாக வந்திருக்கிறது. என்னுடைய காட்சிகளுக்கு 36 நாட்கள் ஆகியது. எல்லாமே முடிந்து முழு படமாக பார்க்கும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. பாடல் இல்லை, காதல் காட்சிகள் ஆனால், கதைக்கு அவை இரண்டுமே தேவைப்படவில்லை” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!